முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தலைமகன் பொழில்கண்டுவியத்தல்
பிறப்பாம் வனம்புக் குழல்வார் தமக்குப் பெரிதுமுன்செய்
அறப்பா லுதவுந் திருவெங்கை வாண ரடிநிழல்போல்
உறப்பாலை செய்துய ரெல்லா மொழிய வொளியிழைதாழ்
நிறப்பார மென்முலை யாய்பொழி லோவொன்று நேர்ந்ததுவே.
(321)
தலைமகன் றலைமக ளசைவறிந்திருத்தல்
ஆடும் பதத்தர் திருவெங்கை வாண ரதிகபுகழ்
பாடுங் குமுதம் புனலூற வெய்ய பரிதியினால்
வாடுங் கமல முகவேர் புலர மலர்ந்துதென்றல்
ஓடுங் குளிர்தண் பொழிற்கே யிருந்தரு ளொண்ணுதலே.
(322)
உவந்தலர்சூட்டி யுண்மகிழ்ந்துரைத்தல்
எண்ணிய வெண்ண முடிப்பார்தம் வெங்கை யிமயவெற்பில்
நுண்ணிய நூன்மருங் குற்கனி வாய்வின் னுதலியுன்றன்
மண்ணிய நீல மணிவார் குழலின் மலர்புனையப்
பண்ணிய புண்ணிய முன்னமென் னோவென்றன் பாணிகளே.
(323)
கண்டோரயிர்த்தல்
நந்தனும் வெள்ளை மதகரி வேந்து நறியவர
விந்தனு முள்ளங் கசிந்தேத்தும் வெங்கை விமலர்தருங்
கந்தனும் வள்ளியு மோவறி யேமிந்தக் காளையெழின்
மைந்தனும் வள்ளிதழ்ப் போதணி வார்குழன் மங்கையுமே.
(324)
கண்டோர் காதலின்விலக்கல்
தாதை யனைய திருவெங்கை வாணர் தடஞ்சிலம்பில்
சீதை யொடுவரு மாலனை யாயித் திருந்திழையாள்
கோதை வெயிலிடைப் பட்டனை யாளெங் குடிலில்வைகி
மாதை யுடன்கொண்டு நாளையுன் னூர்க்கு வழிக்கொள்கவே.
(325)

321.21. அறப்பால்-அறப்பயன். உற-மிகுதியாக. பாரம்-பொறை. 322.22. ஆடும்பதத்தர்-திருக் கூத்தியற்றும் திருவடியை உடையவர். பாடுங்குமுதம்-வாய். வேர்-வியர்வை. ஓடுதல்-இயங்குதல். ஒண்ணுதல்-அன்மொழித்தொகை. 323.23. மண்ணிய-அலங்கரிக்கப்பட்ட. பாணிகள்-கைகள். என்னோ-யாதோ? 324.24. நந்தன்-சங்கையுடையவனாகிய திருமால். வெள்ளை மதகரி வேந்து-வெள்ளானையை உடைய இந்திரன். அரவிந்தம்- செந்தாமரை மலர். விமலர்-இயற்கையாகவே மலமற்றவர். 325.25. மால் அனையாய்-இராமபிரானைப் போன்றவனேகோதை-பூமாலை. வைகல்-தங்கல். வழிக்கோடல்-பயணப்படல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்