முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
நிமித்தம் போற்றல்
பாவிரி மாபுகழ் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
பூவிரி வான்பொழில் காப்பதற்-காகப் பொருதிரைத்தண்
காவிரி மாதை வருவித்த காக்கையுங் காக்குங்கொலோ
மாவிரி மாகுழ னன்மாதை யீங்கு வரவழைத்தே.
(336)
சுரந்தணிவித்தல்
சங்கலைத் தொண்புன லூர்வய னாவற் றலைவனுக்குச்
செங்கலைப் பொன்செய்த தென்வெங்கை வாணர் திருவருளால்
பொங்கலைத் தண்புனற் காவிரி நாட்டிற் பொலிகநிறை
அங்கலைத் திங்கண் முகமாது சென்ற வருஞ்சுரமே.
(337)
தன்மகள் மென்மைத்தன்மைக் கிரங்கல்
நோக்கக் குழையுஞ் சிலையாளர் வெங்கையி னுண்ணிடையார்
மோக்கக் குழையு மனிச்சமென் பூவின் முகந்தருத்தித்
தூக்கக் குழையும் பதங்கள்வெம் பாலைச் சுடுபரலில்
தாக்கக் குழையுங் கொலோகுழை யாதெங்க டையலுக்கே.
(338)
இளமைத்தன்மைக் குளமெலிந்திரங்கல்
பேதைப் பருவ மிறந்தே பெதும்பைப் பிராயமுறும்
போதைத் தொடங்கி மருண்மாலை போல்பவள் போனதென்னோ
மாதைக் கலந்த விடத்தார் திருவெங்கை வாணர்வெற்பில்
கோதைச் செழுங்கதிர் வேல்வேந் தொடுமக் கொடுஞ்சுரமே.
(339)

336.36. பாவிரி-பாக்களில் விரிந்துகிடக்கிற. மாவிரி-வண்டுக்கூட்டம் போல விரிந்த. மாகுழல்-நீண்டகூந்தலையுடைய. காவிரிமாது-காவிரியாறாகிய பெண். 337.37. ஒண்புனல்-ஒள்ளியநீர். நாவல் தலைவனுக்கு.-சுந்தரமூர்த்தியடிகளுக்கு. 338.38. நோக்கக் குழையுஞ்சிலை-பொன்மலை. சிவபிரானுடைய கண் நெருப்பாகையாலும் நெருப்பைக்காணிற் பொன் குழைதலியல்பாகலானும் ‘நோக்கக் குழையுஞ் சிலையாளர்’ என்றார். 339.39. பேதைப் பருவம்-ஏழுவயதுப் பருவம். பெதும்பைப் பருவம்-ஒன்பது வயதுப் பருவம். மருண்மாலை-மயக்கத்தைச் செய்கின்ற மாலைக்காலம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்