முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
மிக்கோ ரேதுக்காட்டல்
சேவிற் பிறங்குங் கொடிவெங்கை வாணர் சிலம்பணங்கே
பூவிற் பிறந்த பசுந்தேன் விரைவழி போந்தணுகும்
மாவிற் கலது மலர்க்கேது செய்யுமவ் வாறெனவே
ஏவிற் சிறந்த விழியா ணமக்குமென் றெண்ணுகவே.
(344)
செவிலியெயிற்றியொடு புலம்பல்
அள்ளி யளைந்து பசுந்தா தளியின மம்புயமென்
பள்ளி யுறங்குந் திருவெங்கை வாணர் பனிவரையாள்
வள்ளி நடந்த வழிதூர்ந் திடாதவ் வழிநடந்தாள்
கள்ளி படர்ந்த சுரத்தே வருமறக் காரிகையே.
(345)
செவிலி குரவொடு புலம்பல்
புரவே புரியுந் திருவெங்கை வாணர் புனையுமணி
அரவே புரையு மகலல்கு லாளொ டனைதுயர
வரவே தகுவதன் றென்றா யிலைமலர் வாய்திறக்குங்
குரவே மொழிநல் குரவே நினக்கிது கூறுதற்கே.
(346)
சுவடு கண்டிரங்கல்
புலியோ டரவு தொழுங்கூத் துடையவர் பூவையர்கைப்
பலியோ டுயிர்கவர் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
மலியோ தியினிசை வண்டுபண் பாடுறும் வஞ்சியடி
கலியோ முனஞ்செலும் வெள்ளடி யோடு கலந்ததுவே.
(347)

344. சே-இடபம். பிறங்கல்-விளங்கல். சிலம்பு-மலை. அணங்கு-பெண். விரை-மணம். அணுகல்-சேர்தல். மா-வண்டு. ஏ-அம்பு. 345. அளைதல்-பூசுதல். தாது-மகரந்தம். பள்ளி-படுக்கை. மறக்காரிகை-மறப்பெண். 346. புரவு-புரத்தல், காத்தல். புனைதல்-தரித்தல். மணி-மாணிக்கம். துயர்தல்-துன்புறல். நல்குரவு-வறுமை. குர-குரா. 347. புலி-வியாக்கிரபாதர். அரவு-பதஞ்சலி முனிவர். ஓதி-கூந்தல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்