முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டுகேட்டல்
வேண்டா ருயிர்கவர் செவ்வே லிறைவனு மெல்லியலும்
மீண்டா ரெனவுண் மகிழ்ந்துநின் றேன்மலர் வேதன்முதல்
மாண்டா ரெலும்பணி வெங்கைபு ரேசர் மணிவரைமேல்
தூண்டா விருஞ்சுடர் போல்வரு வீரெதிர் தோன்றுறவே.
(348)
அவர் புலம்பறேற்றல்
என்னூர் பெயரவ் விளங்கா ளையுமிவ் விலங்கிழையாள்
தன்னூர் பெயர்நும் பிணைவிழி யாளுந் தனிவினவிப்
பொன்னூ புரவடி வஞ்சிபங் காளர் பொருந்துகொடி
மின்னூர் முகிலுறங் கும்பொழில் சூழ்வெங்கை மேவினரே.
(349)
செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தல்
சேணா டியமதில் வெங்கைபு ரேசர் செழுஞ்சிலம்பில்
மாணா வலர்மொழி வார்க்கேது சொல்வனென் வாய்திறந்து
நாணா தினியெங்ஙன் மீண்டுட னன்னகர் நான்புகுவேன்
காணா மருங்கு லொருமாதை யாற்றிடைக் கண்டிலனே.
(350)
மீட்சி
தலைவி சேணகன்றமை செவிலி தாய்க்குணர்த்தல்
கூனும் பிறையொன் றணிவார்தம் வெங்கைக் குளிர்சிலம்பில்
ஊனுங் குருதியுந் தோய்வடி வேல னொருவனொடு
மானுங் கயலும் பணிவிழி யாளரி மாவழங்கு
கானுங் கரைபொரு கான்யாறுங் குன்றுங் கடந்தனளே.
(351)

348. வேண்டார்-பகைவர். மீளல்-திரும்பல். உள்-மனம்; ஆகுபெயர். தூண்டா-தூண்ட வேண்டாத. இருஞ்சுடர்-பெருவிளக்கு. 349. பொன்நூபுரம்-பொன்னாலியன்ற சிலம்பு. இளங்காளை-என்றது தலைமகனை. இலங்கிழையாள் என்றது தன் மனைவியை. பிணைவிழியாள் என்றது தலைவியை. 350. சேண் ஆகுபெயர். நாடல்-தேடல். மாணாவலர் என்றபடியால் இழிவாகிய அலரெனலாயிற்று. 351. பணி-வணங்குதற்குரிய. அரிமாவழங்கு-சிங்கங்கள் இயங்குகின்ற. கான்யாறு-காட்டாறு, அரிமா இருபெயரொட்டு பண்புத் தொகை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்