முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தன்மனை வரைதல்
நற்றாய் மணமயர்வேட்கையிற் செவிலியை வினாதல்
மின்னைப் பயந்த வெனக்கோ கதிர்வடி வேலொருவன்
தன்னைப் பயந்த வினைக்கோ திருவடித் தாமரையில்
என்னைப் புரந்தவர் வெங்கையன் னாய்மண மேற்றுவக்கும்
முன்னைத் தவமெவர்க் கோவறி யேம்வந்து முற்றுவதே.
(357)
செவிலிக்கிகுளை வரைந்தமையுணர்த்தல்
செவ்வாய் மடமயி றன்னையின் னேமணஞ் செய்திருந்தார்
அவ்வா ளரியனை யாரென்று தூத ரறைந்தனரால்
சைவ கமந்திகழ் வெங்கைபு ரேசர் தடஞ்சிலம்பில்
எவ்வா றறைவ தறங்கோடி செய்துமுன் னீன்றவட்கே.
(358)
வரைந்தமை செவிலி நற்றாய்க்குணர்த்தல்
பொன்னா ரிதழித் தொடையாளர் வெங்கைப் பொருப்பிலிந்த
நன்னா ளினிவருங் காலத் துறாதென நன்மணஞ்செய்
தன்னாய் வருகின் றனர்மட மாதுட னன்பரென்று
சொன்னார் மொழிபிற ழாதுண்மை கூறுநற் றூதுவரே.
(359)
தலைவன் பாங்கிக்கியான்வரைந்தமை நுமர்க்கியம்பு சென்றென்றல்
ஊனெழு வாய்மழு வெங்கைபு ரேச ருயர்சிலம்பில்
தேனெழு வார்குழ லாய்நுமர் தேறத் தெளித்தருள்வாய்
வானெழு மீர மதிவாண் முகத்துங்கள் வல்லிதனை
யானெழு நாவொன்று சான்றாகச் செய்த விருமணமே.
(360)
பாங்கிதானதுமுன்னே சாற்றியதுரைத்தல்
பன்னா ளருந்தவஞ் செய்ததன் மாதைப் பனியிமய
நன்னாக நல்க வரைந்தார் திருவெங்கை நாடளிக்கும்
மன்னாவெம் மேம வரைவளர் மாதை வரைந்தமைதான்
முன்னா வறிந்து பயந்தா டனக்கு மொழிந்தனனே.
(361)

357. மின்னை-மின்னற் கொடி போல்பவளாகிய தலைவியை. பயத்தல்-பெறல். கதிர்வடி வேலொருவன் என்றது தலைமகனை. உவத்தல்-மகிழ்தல். 358. செவ்வாய் மடமயில்-சிவந்த வாயினையுடைய இளமை தங்கிய மயில் போன்ற தலைவி. அறங்கோடி-பலவகையான அறங்கள். 359. பொன்னார் என்பதில் ஆர் உவம உருபு. இதழி : ஆகுபெயர். தொடை-மாலை. இனி வருங்காலம்-எதிர் காலம். 360. வாய்-மழுவின்கூர் பொருந்திய பக்கம் தேன்-வண்டுகள். தெளித்தல்-விவரித்துச் சொல்லல்-எழுநா-தீ. தீக்கு ஏழுநாக்களுண்மையால் இவ்வாறு பெயர் உண்டாகியது. 361. பன்னாள்-நெடுங்காலம். நாகம்-மலை. வரைதல்-மணஞ்செய்தல். அளித்தல்-காத்தல். ஏழம்-பொன். பயந்தாள்-ஈன்றவள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்