முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
மணந்தவன்போயபின் வந்தபாங்கியோ டிணங்கியமைந்தனை யினிதிற்புகழ்தல்
பிறந்தவன் றேநன் மணிநேர் புதல்வன் பிறர்கடைத்தேர்
பறந்தடைந் தாங்குநம் வாய்தலி லேவரப் பண்ணினனால்
இறந்தவங் கம்புனை யெம்மான்றன் வெங்கையி லிம்மையினுஞ்
சிறந்தவின் பந்தர வல்லவ னேயெனத் தேறினமே.
(406)
தலைவி தலைவனைப் புகழ்தல்
பண்ணுற்ற மென்மொழி யாய்தமிழ் நூலிசைப் பாவலர்தாம்
எண்ணுற்ற நம்முயிர்க் காதலர் போல்பவ ரில்லையெனப்
பெண்ணுற்ற பங்கர் தம் வெங்கையி லேதண் பெரும்பொழில்வாய்க்
கண்ணுற்ற காதலை யின்றள வாகவும் காட்டினரே.
(407)
சிலைநுதற்பாங்கி தலைவியைப் புகழ்தல்
கேளோர் பரத்தையிற் போகா திருத்தலிற் கீர்த்திபெற்று
நாளோ டிலங்கு மருந்ததி யோவொப்பு நாகமணி
தோளோ னொருதெய்வ சூளா மணிவெங்கைத் தொன்னகரில்
வாளோ வெனுங்கட் பிறைவா ணுதலெங்கண் மாதினுக்கே.
(408)
ஓதற்பிரிவு
ஓதற்குப்பிரிவுதலைமகன்றன்னாலுணர்ந்ததோழி தலைமகட்குணர்த்தல்
விண்ணுடை யார்புகழ் நூபுர பாதர்வெல் வேனெடுங்கண்
பெண்ணுடை யார்மகிழ் தென்வெங்கை மாநகர்ப் பெண்ணணங்கே
கண்ணுடை யார்கற் றவரேகல் லார்கண் முகத்திரண்டு
புண்ணுடை யாரெனக் கூறிநங் காதலர் போயினரே.
(409)

406.06. வாய்தல்-வாயில். அங்கம்-எலும்பு. அஃது ஆகுபெயராய் அதனாலமைந்த மாலையை உணர்த்திற்று. இம்மை-இவ்வுலகம். தேறல்-தெளிதல். 407.07. எண்உற்ற-மதித்தற்குரிய. பண்ணுற்றமென்மொழியாய் என்றது தோழியை. கண்ணுறல்-காண்டல். 408.08. கேள்-கணவன். பரத்தை-விலைமாது. நாள்-நாள்மீன். எங்கள் மாதினுக்கு அருந்ததியோ ஒப்பு என்று முடிக்க. 409.09. விண்ணுடையார்-தேவர்கள். நூபுரம்-காற்சிலம்பு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்