முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
9. திருவெங்கைக்கோவை
தூதிற்பிரிவு
தூதிற்குப் பிாவு தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல்
சடைநின்ற கங்கையர் வெங்கையி லேயொரு சந்துசென்றார்
படைநின்ற கண்ணிநங் காவல ரின்றுபற் றாசொன்றுதான்
தொடைநின்ற நேரிசை முன்குற ளுந்தனிச் சொல்லுமுற
இடைநின்று கூட்டுதல் போலிரு வேந்தை யிசைப்பதற்கே.
(415)
தலைமகள் முன்பனிப்பருவங்கண்டு வருந்தல்
கருங்காள கண்டர் திருவெங்கை வாணர் கனகவெற்பில்
பொருங்கா வலர்தம் பகைதணிப் பான்முனம் போயினவர்
பெருங்கால முன்பனி நாள்வந்தும் வந்திலர் பேதையர்மேல்
வருங்காம வெஞ்சரந் தன்னையு மாற்ற மனமதித்தே.
(416)
தோழியாற்றுவித்தல்
போதாகி வந்த பிறைவே ணியர்வெங்கைப் பொன்னகரில்
காதாகி வந்தநல் வள்ளையிற் றூங்கு கனங்குழைசேர்
மாதாகி வந்தசெந் தேனே யவர்தம் வரவுசொலத்
தூதாகி வந்தது முன்பனி நாண்மன்னர் தூதுவர்க்கே.
(417)
துணைவயிற்பிரிவு
துணைவயிற்பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழிதலைமகட்குணர்த்தல்
கடுக்கை யணிந்த முடியோன் றிருவெங்கைக் காரிகையாய்
உடுக்கை யிழந்தவன் கையோர் பொருளை யொழித்ததனைத்
தடுக்கை விரைந்தது போனட்ட வேந்தன் றனக்குதவி
அடுக்கை விழைந்து நினைவிடுத் தார்நட் பறிந்தவரே.
(418)

415.15. சந்து சென்றார்-தூதுசென்றவர். படைநின்ற கண்ணி-வேற்படைபோல் அமைந்த கண்ணையுடையவள். பற்றாசு-இரண்டை ஒன்று சேர்ப்பது. 416.16. காளம்-நஞ்சு. பொருதல்-போர் செய்தல். தணிப்பான்-தணிக்க. காமசரம்-காமன்கணை. 417.17. போது-அரும்பு. வள்ளை-வள்ளைத் தண்டு. தூங்குதல்-தொங்குதல். கனங்குழை-கனவிய குழை (இது காதணி.) 418.18. கடுக்கை-கொன்றைமாலை. உடுக்கை-ஆடை. விழைதல்-விரும்பல். விடுத்தல்-நீங்கல்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்