முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
கார்தரு சுருண்மென் குழற்சிறு நுதற்பூங்
      கணைபுரை மதாரிக் கருங்கண்
தார்தரு குவவுக் கொங்கைநுண் மருங்குற்
      றையலார் மையலென் றொழிவேன்
சீர்தரு மணியி னணிந்தன வெனக்கட்
      செவியுமொண் கேழலின் மருப்புஞ்
சார்தரு முலக விளக்கெனுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(24)
நந்துகைத் தலத்து நாரணற் கயற்கு
      நவமணிக் கரகநீ ரிருந்தும்
மைந்துறக் குறித்து மாட்டியுங் காண்பான்
      மதித்திடா துனையெதிர்ந் திலரே
ஐந்துகைத் தனிக்கோட் டொருபெருங் களிறு
      மறுமுகம் படைத்த கேசரியுந்
தந்தெமைப் புரக்குங் கருணைகூர் சேரண
      சைலனே கைலைநா யகனே.
(25)
வினையரும் புகலிக் கிறைமணப் பந்தர்
      விருந்தினுக் குதவிலேன் முந்திற்
றுனையிரந் திடுவான் வந்தனன் பதநீ
      யுதவியென் றுயரொழித் தருளாய்
இனியபைந் தமிழின் பொதியமால் வரைபோ
      லிசைக்குரு காதிம மலையின்
தனையையின் றீஞ்சொற் குருகுறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(26)

24. அணியின்-அணிபோல. அக்கினி மலையாதலின் உலக விளக்கென்றார்; உயிர்க்குயிராய்நின்று உணர்த்துஞ்சோதி என்றலுமாம். கட்செவி-பாம்பு. தார்-மாலை. குவவு-பெருத்த குழலையும் நுதலையும். இருகண்ணையும்; கொங்கையையும், மருங்குலையும் உடைய தையலார் என உம்மை விரிக்க. 25. நாரணற்கு நந்தும் அயற்குக் கரகநீரும் என உம்மை விரிக்க. குறித்தல்-ஊதுதல்.நந்து-சங்கு. மைந்து-வலிமை. கேசரி-சிங்கம். ஐந்துகைத்தனிக் கோட்டொரு பெருங்களிறு-ஆனைமுகக்கடவுள். 26. அரும்-அருமை; இன்மை. மணவிருந்திற்கு வரவில்லை, உன்னிடத்திரப்பதற்காக வந்தனன். உணவினைக் கொடுத்துக் காப்பாற்றுவாயாக என்று மற்றொரு பொருளுங் கொள்க. பதம்-பாதம்(முத்தி); உணவு. புகலிக்கிறை-திருஞானசம்பந்தர். தனையை-மகள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்