முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
பெண்ணருங் கலமே யமுதமே யெனப்பெண்
      பேதையர்ப் புகழ்ந்தவந் திரிவேன்
பண்ணுறுந் தொடர்பிற் பித்தவென் கினுநீ
      பயன்றர லறிந்துநிற் புகழேன்
கண்ணுறுங் கவின்கூ ரவயவங் கரந்துங்
      கதிர்ணூ றாயிரங் கோடித்
தண்ணிறங் கரவா துயர்ந்தெழுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(27)
உயங்குநூ லிடைப்பூங் கோதைய ரல்கு
      லொளிமணிப் பாம்புதீண் டுதலால்
மயங்குவேன் றனக்குன் பதமருந் துதவி
      மயக்குமென் றொழித்தருள் புரிவாய்
முயங்குமா புகழ்ப்பூம் புகலியந் தணர்க்கு
      முத்துவெண் பந்தரீந் தகல்வான்
தயங்குமீன் முத்துப் பந்தர்வாழ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(28)
மெய்த்தவ ரடிக்குற் றேவலின் றிறத்தும்
      விளங்குமா கமவுணர்ச் சியினும்
புத்தலர் கொடுநிற் பரவுபூ சையினும்
      பொழுதுபோக் கெனக்கருள் புரிவாய்
முத்தமு மரவ மணிகளு மெறிந்து
      முதிர்தினைப் புனத்தெயின் மடவார்
தத்தைகள் கடியுஞ் சாரலஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(29)

27. இவரது ஒளி இலக்கங்கோடி. சூரியர்களது ஒளியை ஒப்பினும் அது போல வெம்மை செய்யாது இதஞ் செய்வதென்பார் தண்ணிறம் என்றார். இதனை “தண்ணந் திங்களிற் றண்ணெனத்தன்கதிர்-வண்ணங் குன்றுறா ஞாயிறு” என்பதனாலும் அறிக. 28. மீன்முத்து-உடுக்களாகிய முத்து. பாம்பொன்று தீண்டினால் அதன் நஞ்சு தலைக்கேறி மயங்குவார்க்கு மருந்துகொடுத்துத் தீர்ப்பது போல், பெண்கள் அல்குற் பாம்பு தீண்டி அவாவெனும் நஞ்சு ஏறி மயங்குமெனக்கு அதனையொழிக்க உன்றிருவடியாகிய மருந்தளித்துதவி யருள் என்பார். “உன்பதமருந்துதவி மயக்க மென்றொழித்தருள் புரிவாய்” என்றார். பதம் என்பது பாதம்; அது திருவடி. புகலியந்தணர்-திருஞான சம்பந்தர். தயங்கும்-விளங்கும். 29. புது அலர்-அன்றலர்ந்த மலர். உண்மைத் தவமுடையவர் அடிகளைப் பரவிப் பணிசெய்தால் பேரின்ப நிலையடையலாம் என்பது. தத்தைகள் கடியும்-கிளிகளையோட்டும். முத்துக்களையும் பாம்பின் மணிகளையும் எறிந்து ஓட்டுதற்கு அந்நிலத்தின் செழுமையையோ அல்லது மணிகளின் பெருமையை அறியாமையையோ காரணமாகக் கொள்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்