முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
10. திருவெங்கைக் கலம்பகம்
எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
காணாம லயன்றேடு நின்மு டிக்கட்
       கண்ணப்பன் றொடுகழற்கால் வைத்தே போதில்
கோணாக முரிந்ததுவோ குளிர்வெண் டிங்கட்
       கொழுந்துபொறா தொதுங்கிற்றோ நீர்ப்பெ ணன்பு
பூணாம லருவருத்து நோக்கி னாள்கொல்
       பொன்னிதழித் தொடையல்சூழ்ந் திழுத்த தோசொல்
வீணாள்பட் டழியாத வன்பர்க் கன்பாம்
       விமலனே வெங்கைவரு மமர ரேறே.
(92)
கொற்றியார், நேரிசை வெண்பா
ஏறுவக்கும் வெங்கை யிறைவற் றொழுதுதவப்
பேறுவக்கு மின்னே பிடிக்கவோ - கோறுவக்குங்
கூடு குறைத்த கொடுமதனை மொய்த்தகுழற்
காடு குறைத்த கருத்து.
(93)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
கரியவன் கமலக் கோயிற் கண்ணவன் கற்ப கக்கா
உரியவன் சுரர்குற் றேவ லுவந்துநா டொறும்ப யின்றும்
அரியவ னென்னத் தன்றா ளன்பிலா வெனக்கு வெங்கைப்
புரியவ னளித்தா னென்னாற் புரிதருங் கைம்மா றென்னே.
(94)
கட்டளைக் கலித்துறை
எந்தீ வரமதி மாழ்கிச்செவ் வான மெனுங்கொடிய
செந்தீ வரமதி யாகும்வெண் டீவரத் தேம்புமெம்மேல்
இந்தீ வரமதி ரேகவில் வேள்விடி னேதுசெய்வோம்
நந்தீ வரமதி னாடாளும் வெங்கை நயந்தவனே.
(95)

92. கோள்நாகம்-தீமையைச் செய்கின்ற பாம்பு. நீர்ப்பெண்-கங்கை. உரிந்ததுவோ-தோல் உரிபட்டதோ? அருவருத்து-வெறுத்து. 93. ஏறு-காளை. தவப்பேறு-தவப்பெருமை. கோல்-அம்பு. துவக்கும்-தொகுத்திருக்கும். கூடு-அம்புக்கூடு. 94. கரியவன்-திருமால். கமலக்கோயிற். கண்ணவன்-நான்முகன். கற்பகக்கா உரியவன்-இந்திரன். 95. எந்தீவர மதி-எமது சுறுசுறுப்பான அறிவு. மதி-திங்கள். தேம்பும்-வருந்தும். இந்தீவரம்-கருங்குவளை. அதிரேகவில்-புதுமையுள்ள வில். நந்தீ-சிவபெருமானே! வரமதில்-உயர்ந்தமதில்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்