முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
145   ஒக்கலையிற் கொள்ளி னொளிர்பொன் மணியிருப்பிற்
     றக்கவளல் லாரெடுக்கத் தக்ககிலாள் - மிக்க
     வடிவழகுக் கேற்ற மணவாளன் றானெப்
     படியுளனென் றாராயும் பண்பாள் - முடிவில்
     உருவழிந்த வேளை யுரியனெனக் கூறும்
     பொருவழிந்த வோர்கறையும் பூண்பாள் - திருவழங்கு
     பொன்னே யெழின்முளையே பூங்கொடியே பெண்ணரசே
     மின்னே மயிலே விழிமணியே - அன்னே
     வருக வருகவென வாராது தாய்நெஞ்
     சுருக வுருக வுழல்வாள் - பெருகறிஞர்
(146)
150   நெஞ்சம் புரைய நிகழ்வுற் றொருசிறிதும்
     வஞ்சம் புகாத மதர்விழியாள் - துஞ்சி
     விழுந்த கதிரே யெழல்போல் விழுந்த
     தெழுந்ததென வொக்கு மெயிற்றாள் - அழுங்கவுரம்
     மீக்கா ணளவும் வெளிப்படா வுட்பகையை
     நோக்காது வாழு நுசுப்பினாள் - சீர்க்காமன்
     மாதரழுக் காற்றால் வடிவிழிவு காணாமல்
     பேதை யெனவிகழும் பெண்பெருமாள் - காதலுளந்
     தள்ளத் தமர்போற் றமரலா ரும்மகண்மை
     கொள்ளக் கருதுங் குறியினாள் - பிள்ளைப்
(151)
155   பருவத்தா லொத்துப் பகல்விளக்குப் பட்டாங்
     குருவத்தா லொவ்வா ரொடுதான் - தெருவிற்போய்ச்
     செங்கணெடு மாலுந் திசைமுகனு மீசனெனப்
     பங்கமொழி கூறும் படியென்னச் - சங்கம்
     பழிக்கும் வழுச்சொற் பதர்சேர்த்து வைத்த
     இழுக்குங் கலியென்ப தென்னக் - கொழிக்கும்
     புழுதியளைந் தில்லமெனப் போற்றிவிரற் கோலம்
     எழுதிவிளை யாடி யிருக்கும் - பொழுதிலிசை
     வேதச் சிலம்பு மிளிர்பதத்தான் மூவெயிலும்
     காதச் சிலம்பு கரங்கொண்டான் - நாதப்
(156)
160   பணையா னறிய பசுந்துழாய் நாக
      அணையா னறிய வரியான் - துணையாய்
     அடியவரைக் காக்கு மருளான் பனைக்கைக்
     கொடியவரைக் காக்குங் கொலையான் -கடிகொள்
     பனியிதழி மாலைப் படர்சடையான் வெற்பின்
     கனியிதழி மாலைக் கழியான் - இனியநறுங்
     காவிக் கரிய களத்தினா னெம்முடைய
     ஆவிக் கரிய வமுதானான் - பாவித்
     துருகு மகத்தை யுவப்பா னிகழ்வால்
     அருகு மகத்தை யழிப்பான் - பெருகும்
(161)

146.145-150. ஒக்கலை-மருங்கு. தக்ககிலாள்- தகுதியற்றவள். பொருவு-ஒப்பு. விழிமணி-கண்மணி. 151.150-155. புரைய-ஒப்ப. துஞ்சி-மறைந்து. எயிற்றாள்-பற்களையுடையவள். உரம் மீக்காண் அளவும்-மார்பின் மேலே காணும் வரையிலும். நுசுப்பு-இடை. காமன்மாதர்-இரதி. தமரலார்-உறவினரல்லாதவர். மகண்மை-மகளாந்தன்மை. 156.155-160. புழுதியளைந் தில்லமென-மணலாற் சிற்றில் இழைத்து. மூவெயிலுங்காத-முப்புரங்களையும் அழிக்க. சிலம்பு-மலைவில். 161.160-165. நாதப்பணையான்-இசை பாடும் வேய்ங்குழலையுடைய திருமால். துழாய்- துளசி. பனைக்கை-பனை போன்ற கைகளையுடையானை. கடிகொள்-மணங்கொண்ட. காவி-கருங்குவளை. பாவித்து-உள்ளத்தில் எண்ணி. உவப்பான்-மகிழ்வான். மகம்-தக்கனது வேள்வி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்