முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
165   உருப்பவள மாய வொருவ னிரதி
     விருப்பவள மாய விழித்தான் - பொருப்புவளர்
     மங்கைக் குழையாய் மழுத்தனக்கென் றேந்துவோன்
     சங்கைக் குழையாச் சமைத்தபிரான் - வெங்கைப்
     பழமலையா னாளும் பதியிலான் சீற்றம்
     எழமலையா னாளு மிறைவன் - தொழமலையான்
     வாழி யரம்பையர் தார் வண்டலயர் பேதையராப்
     பூழி யெழுந்தளகம் போய்ப்படிய - ஆழிநெடுஞ்
     செம்பொற் கொடித்தேர் திருமறுகி னூர்ந்துவர
     அம்பொற் கொடிகுறுகு மன்னையரோ - டும்பர்க்
(166)
170    கரியா னெதிர்சென் றவர்தாழத் தாழ்ந்து
     பெரியா னிலைசிறிதும் பேதை - தெரியாமல்
     அன்னைமீ ரித்தே ரமர்பவன்யார் மைந்தனிது
     பன்னுகவென் றாடைமுதல் பற்றுதலும் - மின்னனையார்
     வற்புறுத்த வோர்பொருளை வள்ளுவனார் பத்துமுறை
     சொற்பொருத்தி யோதுந் துணிவுபோல் - தற்பதத்தால்
     ஓதும் பிரமமொரு தானென்ப தொன்றனைமால்
     காதுபவம் பத்தெடுத்துக் காட்டினோன் - சாதம்
     இவட்குநா மேதென் றியம்புவமென் றெண்ணித்
     துவக்கும் வினைவழியாற் றோன்றும் - எவர்க்குமிவன்
(171)
175   தந்தையே யன்றித் தனையனா காதவன்காண்
     அந்தமில்சீர்க் காரைக்கா லம்மைதனை - முந்தொருநாள்
     தப்பா வருளாற் றனக்கம்மை யென்றவன்காண்
     அப்பா வெனுமொழியு மன்பினால் -துப்பார்
     அயிலேர் மகன்மாட் டறிந்தவன்கா ணெங்கள்
     மயிலே யெனவுரைப்ப மற்றும் - வெயிலேர்
     இழையா ளிவனூ ரெவணுரையு மென்ன
     உழையா ரிவனூர்நம் மூர்தான் - அழையாய்
     விளையாட வென்று நகைத்து விளம்ப
     முளையா முலையிளையாண் மோகங் - கிளையாள்
(176)

166.165-170. விருப்ப-விருப்பத்தையுடைய. வளம்-காமன். குழையா-காதணியா. பதியிலான்- தனக்கொரு தலைவனில்லாதவன். மலையான்-போர் புரியாதவன். தொழ மலையான்-தன்னை வணங்குவோரிடம் மாறுபடாமலிருப்பவன். பூழி-புழுதி. 171.170-175. பெரியான்-பெரியவனாகிய கடவுள். பன்னுக-கூறுக. காதுபவம்-வருத்துகிற பிறவி. சாதம்-உண்மை. துவக்கம்-வலிக்கின்ற. 176.175-180. துப்பார்-வலிமை பொருந்திய. வெயில்ஏர் இழையாள்-ஒளிதங்கிய அழகிய அணிகலன்களை அணிந்த பேதை. எவண்-எவ்விடத்தது. உழையார்-பக்கத்திலுள்ளவர்கள். முளையா-தோன்றாத. கிளையாள்-தோன்றாதவளாகி. படிவம்-வடிவம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்