முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
300   தருமுத்தி வேறென்போர் தாமுந்தற் சேரல்
     அருமுத்தி யென்னு மரிவை - ஒருமுத்தி
     வேண்டியுகங் கோடி விளைத்த தவங்கொடுத்துக்
     காண்டலுந்தற் கொள்ளக் கருதுவான் - ஈண்டிமதி
     நள்ளிருள்சென் றுச்சி நணுகிற் குழலொடொவ்வா
     ஒள்ளெழில் வாண்முகத்தோ டொப்பாவாள் - விள்ளலற
     நேர்ந்த விளைஞருறு நெஞ்சியங்கு மாறென்ன
     வார்ந்தநெடுங் கூந்தல் வகிரினாள் - சேர்ந்த
     கயலிரண் டொத்துக் கிடைசிவந்து நாப்பண்
     அயலிருண்டு வெண்ணிறத்த வாகி - மயல்புரிந்து
(301)
305   நீண்ட வடிவகன்று நேர்வள்ளை மீதோடிக்
     காண்டகைய வாயினிகர் கண்ணினாள் - தூண்டுசுடர்
     அன்ன மணிக்குழைக ளஞ்சனவேற் கண்டள்ள
     மன்னவிருந் தாடூசல் வார்செவியாள் - தன்னுள்
     நிலவை விரித்தொடுக்கி நிற்குங் குமுத
     மலருளதே லொக்குநகை வாயாள் - இலகவரி
     மூன்றெய்தி யொள்வளைவெண் முத்து வடமாகக்
     கான்றெய்தி னொக்குங் களத்தினாள் - ஈன்றெய்து
     மாந்தளிர் முன்னாள் வரையன்றி யொவ்வாத
     வேய்ந்தொளிர் பல்வளைய மென்கையாள் - ஏந்திடைமேல்
(306)
310   ஏயு மிருவா ரெழிலொருவா மிக்கவலி
     வீயு மெனவெழுந்த வெம்முலையாள் - காயமெனப்
     பொய்கூ றியவறியேம் புண்டரிகத் தாளிழையின்
     செய்கூறென் றெண்ணவுள சிற்றிடையாள் - மைகூர
     நேர்ந்த வெறும்புகுழி நின்றெழல்போ லுந்திமிசை
     வார்ந்த வுரோமமெனும் வல்லியினாள் - கூர்ந்தமணி
     நேமி வளைகொ ணெடியோன் றிருவுந்தித்
     தாமரையை வென்றிகழுந் தாளினாள் - சோமமுடி
     காண நடக்குங் கருத்தாற் பறந்தவன்னம்
      நாண நடக்கு நடையினாள் - வீணை
(311)

301.300-305. ஒரு முத்தி-ஒப்பற்ற வீடுபேறு. ஒவ்வா-ஒப்பாகாத. ஒள்-ஒள்ளிய. வார்ந்த-ஒழுகிய. வகிர்தல்-பங்குசெய்தல். 306.305-310. வள்ளை-காது. மன்ன-நிலைபெற. கான்று-கக்கி. வேய்ந்து-பொன்னாலு மணியாலும் அழகு செய்யப்பட்டு. வளைய-வளையல்களையுடைய. 311.10-315. இரு-பெரிய. வார்-கச்சு. எழில்-அழகு. ஒருவா-நீங்காத. வீயும்-அழியும். கூறிய-கூற. மைகூர-கருமைபொருந்த. உந்தி-கொப்பூழ். நேமி-உருளை. வளை-சங்கு. சோமமுடி-திங்களையணிந்த முடி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்