முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
11. திருவெங்கையுலா
315   கரங்கொண்டு செம்பவளக் கான்மணிமா டத்து
     வரங்கொண்ட பொற்றவிசின் வைகி - மரங்கொண்ட
     கோடு குழைந்து குழைப்பச் சிலைவன்மைப்
     பாடு குழைந்து பழமாகப் - பாடும்
     இசையால் விளர்ப்பெஞ்சா தெய்துகலை மான்கை
     அசையா வியவர வயர - நசையால்
     நரம்புமொழி கற்க நவிற்றுங் குருவின்
     இரங்கு மிசைபாடி யேற்றி - விரும்பமுதம்
     அன்னா ளிருப்ப வவள்பாங்கி சென்றுமலை
     முன்னா ளுருக்கு முனிநிகர்வை - இந்நாள்
(316)
320   அசையா தடுத்த பழமலையை யன்ன
     இசையா லுருக்குவா யென்ன - இசையா
     எளிய திதுவென் றிசைவீணை யோடும்
     அளிய னெதிர்சென் றடைந்தாள் - ஒளிகொள்
     மதியூர் முடியு மரைமே வடியுங்
     கதிர்வேல் விழிகளிப்பக் கண்டாள் - கொதியா
     வெருவுறுப்பச் சென்று வெருவுற்றாங் கென்னே
     மருவுறுக்குங் கொன்றை மலையை - உருகுவிப்பச்
     சார்ந்தாள் பழமலையாற் றானே யுருகுற்றாள்
     சோர்ந்தாள் விழியருவி தூங்கினாள் - தேர்ந்தாள்
(321)
325   மொழிகற்ற வீணை முறையென்ன வீழ்ந்து
     பழியற்ற தாளிற் பணிய - ஒழிவற்ற
     கோல்வளைக டோற்றாள் குவிமுலைகள் பீர்பூத்தாள்
     நால்வகைய பண்பு நழுவினாள் - சூல்வளையின்
     நொந்தா ளதுபாங்கி நோக்கி யருண்மலைமுன்
     வந்தாடன் யாழான் மகிழ்வித்து - நந்தா
     இசைபெறுவா னெண்ணி யிழந்தாண் முதலுந்
     திசைபெறுவான் வந்தெழுந்து தீரா - வசைபெறுவான்
     நின்றா ளெனக்கொண்டு நில்லாது போயினாள்
     குன்றாத வன்பினொடு கூடவே - நன்றாளும்
(326)

316.15-320. வரம் கொண்ட-மேன்மையைக் கொண்ட. கோடு-கிளை. சிலைவன்மை-மலையாற்றல். பாடு-பெருமை. குழைந்து-கெட்டு. விளர்ப்பு-மேனி வெளுத்தல். கலைமான்-நாமகள். வியவா-வியந்து. அயர-சோர. நரம்பு-வீணை நரம்பு. நவிற்றும்-கற்பிக்கும். குருவின்-குருவைப்போல. மலை முன்னாள் உருக்கு-இராவணன் பொருட்டு முன் காலத்தில் அகத்தியர் இசைபாடி மலையை உருகச் செய்த செய்தி கூறப்படுகிறது. 321.20-325. இசையா-இசைந்து. அளியன்-அருளையுடையவன். மதியூர்முடி-திங்கள் தவழும் முடி. மரைமேவு அடி-தாமரை மலரைப்போலப் பொருந்திய திருவடி. வெருவுறுப்ப-அஞ்சுதலைச் செய்ய. மருவுறுக்கும்-வாசனை பொருந்தும். கொன்றைமலை-சிவபெருமான். உருகுவிப்பச் சார்ந்தாள்-உருக்குவிக்குமாறு சென்றாள். உருகுற்றாள்-அம்மலையால் தானே உருகினாள். தேர்ந்தாள்-இசையில் தேர்ச்சி பெற்றாள். 326.25-330. கோல் வளைகள் தோற்றாள்-வளைந்த வளையல்களை இழந்தாள். பீர்-பசலை. நால்வகைய பண்பு-நாற்குணங்கள். சூல்வளை-சூல் கொண்ட சங்கு. அருள்மலை-மலைபோன்ற அருளையுடைய சிவபிரான். நந்தா-கெடாத. முதலும்-யாழையும். நன்றாளும்-நன்கு அடிமைகொண்ட.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்