முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
13. நெடுங்கழிநெடில்
[நெடுங்கழி நெடில் என்பது பாவின் பெயர். கழிநெடிலடியினும் நீண்டதாகையால் நெடுங்கழி நெடில் என்று பெயர் உண்டாகியது. திருக்கையில் எழுந்தருளிய இட்டலிங்கத்தின் மீதே இவ்விருத்தப்பாடல்களும் இயற்றப்பெற்றுளன. சிவானந்தத்தின் உயர்வு சைவ அருள்நெறிச் சிறப்பு முதலியன இப்பாடல்களிற் கூறப்படுகின்றன.]
பதினான்குசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பெருகுறு மன்பாற் பூசனை புரிந்த
        பிணங்குநூற் சிலம்பிவெவ் வரவம்
    பிறைமருப் புரற்கால் யானையென் றிவற்றின்
        பிறவியோ விதழ்முறுக் கவிழ்ந்து
முருகுமிழ் நறுமென் மலர்புனைந் துன்னை
        முற்றும்வந் தனைபுரி யாமன்
    முகிழ்முலை மகளிர் மயலிடை யழுந்து
        மூடர்தம் பிறவியோ நல்ல
திரைபொருங் கங்கை யுவட்டெடுத் தொழுகுஞ்
        செஞ்சடை மிசையொரு துளிநீர்
    தெறித்தவர் தமையு நறவுகொப் பளிக்குஞ்
        செழுமலர்க் கற்பக வேந்தும்
எரிபுரை யிதழ்ச்செங் கமலநான் முகனு
        மெய்தரும் பதத்தில்வைத் தருள்வோய்
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(1)

1. எப்பிறவி நல்லனவென வினாதற்கணின்ற ஓகாரமிரண்டனுன் முன்னையது அர்ச்சனை புரிந்த சிலம்பி முதலியவைகளினுயர்வும், பின்னையது அது புரியாத மூடரினிழியும் தோன்ற நின்றன. தெறித்தவர் தமையும் வைத்தருள்வோயென இயையும். முருகு-மணம். முகிழ் முலை-மொட்டுப் போன்ற தனம். திரைபொரும்-திரைகள் மோதும். நறவு-தேன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்