முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
13. நெடுங்கழிநெடில்
திருக்குறு மழுக்கா றவாவொடு வெகுளி
        செற்றமா கியமன வழுக்கைத்
    தியானமென் புனலாற் பொய்புறங் கூற
        றீச்சொலென் கின்றவா யழுக்கை
அருட்கிளர் நினது துதியெனும் புனலா
        லவத்தொழி லென்னுமெய் யழுக்கை
    யருச்சனை யென்னும் புனலினாற் கழுவா
        வசுத்தனே னுய்யுநா ளுளதோ
விருப்பொடு வெறுப்பிங் கிலாதவ னென்ன
        வெண்மதி யோடுவெண் டலையும்
    விரைவழி புகுந்த வண்டினம் பசுந்தேன்
        விருந்துணுங் கொன்றைமென் மலரோ
டெருக்கையு மணிந்து மின்னொளி கடந்த
        வீர்ஞ்சடைப் பாந்தணா ணுடையாய்
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(6)
சிவமுட னமூர்த்தி மூர்த்திகர்த் திருவஞ்
        செயன்மலி கருமமென் றருநூல்
    செப்புதத் துவமுஞ் சதாசிவ னீசன்
        றிகழ்தரு பிரமனீ சுரனோ
டுவமையி லீசா னப்பெய ரவனென்
        றுரைத்திடு மூர்த்திக டாமும்
    உற்றவீ சான முதற்பிர பாவ
        முடையநின் றன்னையென் றுணர்வேன்
புவிமுத லனைத்து மாக்குத லளித்தல்
        போக்குத லுயிர்வினை யருத்தல்
    புதிதுறச் செம்பிற் களிம்பென வறிவைப்
        புணர்மல மகற்றுத லென்னும்
இவைபல வியைந்தும் விகாரமொன் றின்றி
        யிரவிபோ னின்றகா ரணனே
    இட்டநன் குதவி யென்கரத் திருக்கு
        மீசனே மாசிலா மணியே.
(7)

6. திருக்குறும்-மாறுபாட்டைக் கொண்ட. தியானம்-இறைநினைவோடிருத்தல். பாந்தள்-பாம்பு. நாண்-கயிறு. 7. சிவசாதாக்கிய முதலிய ஐந்து சாதாக்கிய தத்துவங்களையும் சதாசிவமூர்த்தி முதலிய ஐந்து தத்துவமூர்த்திகளையும் முறையே உற்றன. ஈசானம், சத்தியோ சாதம், வாமதேவம், அகோரம் தற்புருடம் என்னும் முகங்களாகிய பெருமைகள் எனக் கொள்க. இரவி-கதிரவன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்