முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
14. குறுங்கழிநெடில்
முந்திரு வினையுந் தமவென விருப்பின்
      முற்றவற் றின்பயன் றருவாய்
வந்தவை நினவென் றிருப்பினங் கவற்றை
      மாற்றிவீ டுறவருள் குவையே
நிந்தையி லென்னெஞ் சுனதுநெஞ் சென்மெய்
      நினதுமெய் யென்றனிந் தியநின்
இந்திய மெனக்கொண் டென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(3)
கண்ணுடைக் குறையாற் சுடர்பல வாகிக்
      காட்டல்போற் காரண முதலாப்
பண்ணுடற் றிறஞ்சே ரென்றிருக் கதனாற்
      பலவுரு வாயினை யொருநீ
பெண்ணுருப் படைத்த பேரரு ளிடப்பால்
      பெற்றிட வுகந்தளித் தவனே
எண்ணிடைப் படாம லென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(4)
பிறவிமா மிடியன் றானெதிர் கண்ட
      பெறற்கரி தாயவைப் பென்ன
அறிவிலே னயன்மாற் கரியநின் றன்னை
      யம்மவோ வெளிதுகண் ணுற்றேன்
துறவினோ ருள்ளத் தெழுந்தொளி பரப்பித்
      தொல்லிருள் கடியுமெய்ச் சுடரே
இறைவிகூற் றுடையா யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(5)
நினக்குறு கூறா மென்மன மதனை
      நிரைவளைத் தளிர்க்கைநெட் டிலைவேற்
சினக்குறு மலர்க்கட் பேதையர் கொளாமற்
      செறிந்துநீ யேகவர்ந் தருள்வாய்
புனக்குற மகட்கு மயல்கொடு திரிந்த
      பொறிமயிற் குமரனைப் பயந்தோய்
எனக்குறு துணையா யென்கரத் திருக்கு
      மீசனே மாசிலா மணியே.
(6)

3. தமவென-தம்முடையவென. நின-நின்னுடையன. இந்தியம்-பொறி. 4. திருக்கு-அறிவு. பெண்ணுருப்படைத்த பேரருள்-உமாதேவியார் வடிவம் அருளே என்றபடி; அருட்டிருமேனி என்பதுங் காண்க, 5., பிறவிமா மிடியன்-பிறந்தது முதலே பெரிய வறிஞனாக இருப்பவன். வைப்பு-புதைபொருள். தொல்லிருள்-பழமை பொருந்திய ஆணவ இருள். 6., குரு பணிக்கு உடலும், சங்கம பூசைக்குப் பொருளும், சிவத்தியானத்திற்கு மனமும் உரியனவாகப் புரிதல் வேண்டுமென்னும் நூற்றுணிபுபற்றி நினக்குறு கூறாம் மனமென்றார்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்