முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
தொகைமிகு மமரர் முனிவரர் பரவித்
      தொழுதகை யொடுவிரை கமழ்பூம்
புகைமிகு மணிமண் டபத்திடை நெருங்கப்
      புழுகுநீ யணிதல்கண் டுவந்தேன்
குகைமிகு வாயிற் சோதிமா மரஞ்சேர்
      குளிர்மதி விழுங்கவாய் வைத்த
தகைமிகு மூரற் றிரளைநேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(49)
சினம்படு முளங்கொன் றவரவை யெனையுஞ்
      சேர்ப்பது தகுமுனக் கிசைவண்
டினம்படு மலரி னகவித ழொடுபுல்
      லிதழுமொன் றுதலுல குடைத்தே
மனம்படு மடிமை யுளன்சிலை யெறிக்கு
      மனங்குழைந் துமையவள் களபத்
தனம்பட வடிவங் குழைந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(50)
வாம்பரி கரிதேர் சிவிகைபொற் குவியன்
      மணிப்பணி பெரும்புவி யாட்சி
ஆம்பரி சலவென் றுன்பத மருவி
      னன்றியென் கவிகளென் கவிகள்
காம்பரி முரண்மும் மதகரி வளைத்த
      கைவிட மோதலாற் கதிர்த்தேர்த்
தாம்பரி துணுக்கென் றீர்த்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(51)

49. முன் ஒரு புழுகுபூனை இச்சோணசைலப் பிரானுக்குச் சாந்தெனப் புழுகையப்பி வசித்த புண்ணியத்தால், அயோத்தியில் ஏமாங்கதவேந்தனாகி உதித்துப் பூர்வசன்ம வாசனையால் ஈங்கெய்தி, அத்தொண்டையே இயற்றிச் சிவபதமெய்திய ஐதிகம்பற்றி நடக்கும் அம் மகோற்சவதரிசனங் கிடைக்கப்பெற்ற உவகைமேலீட்டால் துதித்தவாறு. சோணசைல நாதருக்குக் குகை திருவாய்; சோதி மரம் அன்னபாத்திரம்; சந்திரன் பாற்றிரளன்னம் போல்வன. சோதி மரம்-இரவில் ஒளிகால்வதாகிய ஒருமரம். மூரல்திரளை-உணவு உருண்டை. 50. கோபத்தை அறவே அடக்கியொழித்த நிலையுடையவர்களைச் ‘சினம் படுமுளங்கொன்றவர்’ என்பர். சாக்கிய நாயனார் புறத்தே தொண்டு செய்யாது அகத்தொண்டு செய்தமையான் அவரை ‘மனம்படுமடிமை யுளன்’ என்றார். உள்ளத்தவன் என்பது ‘உளன்’ என நின்றது. 51. ஆம் பரிசு-விருத்திக்குரிய தன்மையன. மருவின்-உட்பொருளாகி நிலவின். காம்பு மோதலால் எனவியையும். காம்பு-மூங்கில். அரிமுரண்-சிங்கத்தோடு மாறுபடுகின்ற. வாம்பரி-தாவுகிற குதிரை. துணுக்கென்று-விரைவாக.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்