முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
அங்கையி னெல்லி யெனவந்தெ னங்கை யமர்ந்தவிளந்
திங்களங் கண்ணி நினையன்றிப் போய்ப்பிற தெய்வந்தொழல்
கொங்கவிழ் பூந்துணர்க் கற்பக நீழற் குடிமுனிந்து
பொங்கெரி வெந்திர யத்தூ டிருப்பப் பொருந்துவதே.
(5)
சித்து நிரஞ்சனத் துச்சூனி யத்துச் செயலுரைதீர்
நித்த வநாதி சரணன் சரணனந் நிட்களத்தே
அத்தனி மாலிங்க மாதியி னானயிக் காதிகளாய்
மெய்த்த வுனையென்று நீங்கேனெ னங்கை விடாதவனே.
(6)
கண்ணி லிரவி செவியிற் றிசைநின் கருத்தின்மதி
ஒண்ணுத லிற்கனல் வானுத ரத்தி லுயிர்ப்பில்வளி
வண்ண வடியிற் புவியிந் திரனயன் மால்புயத்தில்
அண்ணல் வதனத் தரன்றோன்று மென்கை யமர்ந்தவனே,
(7)
காயங் கரணநற் பாவ மறிபவன் காணறிவு
ஞேயங்க ளாதி முதனடு வீறி னினக்கயலே
ஆயிங் கொருபொரு ளர்ப்பிப்ப லென்ப தவிச்சையன்றோ
பாயுஞ் சினவிடை யொன்றூரு மென்கைப் பரஞ்சுடரே.
(8)
சத்தங்க லிங்கங்க ளாயே நிகழ்ந்தது சத்திபத்தி
சித்திங் கடைந்தது கைமுக வர்ப்பித சேடங்களாய்
மெத்தென் றிலங்குநின் னானந்த மேயென் விழிகளிப்பக்
கைத்தங்கு செம்பொரு ளேயருள் காட்டுங் கறைக்கண்டனே.
(9)
வான்குறித் தெய்யுங் கணைநுதிக் கேநிற்கும் வானெனவே
யான்குறித் தெய்தப் புகுமறி வின்க ணிருத்திகண்டாய்
கூன்குறித் திங்கட் சடையாய் மகரக் குழைதடவும்
மான்குறிக் குங்க ணுமைபங்க னேயென்கைம் மாணிக்கமே.
(10)
பிரமமுந் தானு மயலென் றருச்சிக்கும் பேதநிலை
தருமம் மயலற நானாகி நின்றனை தான்சிவமென்
றருமை வினையி லபேதம் புகாம லருச்சிக்குமா
றிருமை வடிவுகொண் டுற்றாயெ னங்கை யிறையவனே.
(11)

5. கண்ணி-மாலை. முனிந்து-வெறுத்து. வெந்நிரயம்-கொடிய நரகம். 6. மெய்த்த-மெய்ப்பொருளாகவுள்ள, 7., கண்ணில் இரவி-கண்ணில் கதிரவன், உயிர்ப்பு-மூச்சுக்காற்று, வளி-காற்று. 8. காயம்-உடல் கரணம்-அந்தக்கரணம். அர்ப்பிப்பல்-படைப்பேன். அவிச்சை-பொய். 9. கறைக்கண்டன்-கறை பொருந்திய கழுத்தையுடையவன். 10. வான்குறித் தெய்யுங்கணை-விண்ணைக் குறித்துச் செலுத்தப்படும் அம்பு. மகரக்குழை-மகரமீன் வடிவாகச் செய்யப்பட்ட காதணி. மான் குறிக்கும்-மானைப்போன்று விளங்கும். 11.1, அயல்-வேறு. நானாகி நின்றனை-நீ நானாகி நின்றாய்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்