முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
துயிலினும் போகினு நிற்கினும் வீழினுஞ் சொல்லினுமொன்
றயிலினுங் காணினுங் கேட்பினும் வாழினு மல்லலொடு
பயிலுனுஞ் சோரினுந் தேறினு நீக்கினும் பற்றினும்பொய்
குயிலினுஞ் சோம்பினு நிற்கட வேனென்கைக் கொற்றவனே.
(18)
ஓடுந் தனமும் புகழும் பழியு முயர்விழிவுங்
கேடுந் திருவு மமுதமும் புற்கையுங் கேள்பகையும்
வீடுங் குடிலு மகளீரு மன்னையும் வேறறவே
நாடுங் கருத்து வருமோ வெனக்கென்கைந் நாயமே.
(19)
பாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனும்
நாடு மளவிளி னீயன்றி வேறிலை நான்முகன்மால்
தேடு மருமருந் தேயமு தேயிளந் திங்கண்முகிழ்
சூடு மணிவிளக் கேகர பீடத்திற் றூயவனே.
(20)
இல்லாள் புதல்வ ரனைதந்தை பொன்மண் ணிடைவிழைவு
செல்லா மருளு மயறீர்ந்து நின்கழல் சேர்ந்துனக்கே
எல்லா முதவுநற் சித்தத் துறைகுவை யென்கையுள்ளாய்
நல்லார் புகழ்தரு மாசார லிங்கமென் னாமமுற்றே.
(21)
பழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ
பொழியா வருடரு மட்டா வரண முவந்துகொண்டே
அழியா துயருநற் புத்தி யெனுங்கை யமர்வைகண்டாய்
மொழியா வருங்குரு லிங்கமென் றேயென்கை முன்னவனே.
(22)
விடயங் களினண்ணி யானென தென்னு மிகையொருவி
அடையும் புலனினக் காக்குந் தவிரகங் காரப்பெயர்
உடையங் கரமிசை நற்சிவ லிங்கமென் றுற்றனைகாண்
புடையம் பிகையொ டமர்வாயெ னங்கைப் புராந்தகனே.
(23)

18. அயிலினும்-உண்டாலும். அல்லல்-துன்பம். சோரினும்-சோர்ந்தாலும். குயிலினும்-சொன்னாலும். 19. இதில் கூறப்பட்டுள்ள நிலைகள் கைவரப்பெற்றவர்கள் மெய்யறிவாளர்களாவர். 20. எல்லாம் நீயே என்பது இப்பாடலின் கருத்து. 21. மருளும் மயல்-மரளச் செய்யும் மயக்கம். 22. மனைவேட்கை-பிறர் மனைவியை விழைதல். பரதெய்வம்-பிற தெய்வங்களைப் போற்றல். 23. விடயங்களில்-உலகப் பொருள்களில். மிகை ஒருவி-குற்றத்தில் நீங்கி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்