முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
15. நிரஞ்சனமாலை
நில்லா தியங்கும் வளியொடு கூடி நிலையழிந்தே
புல்லா விடயத் தலமர னீங்குபு பொய்யினெறி
செல்லா தொளிர்நன் மனத்தே யிருத்தியென் செங்கையுள்ளாய்
கல்லா ரறிவருஞ் சங்கம நாமங் கடைப்பிடித்தே.
(24)
உடம்பு சதிபதி தானாய் விடயங்க ளுண்டுழலா
தடங்கு சதியொரு தானாகி நீபதி யாகவுனைத்
தொடர்ந்து நுகருநன் ஞானக் கரத்திடை தோன்றுவைமால்
கடந்து வருபிர சாதமென் றேயென்கைக் கண்ணுதலே.
(25)
யானா ரடிமை சிவனே யிறையென் றிருப்பதுபோய்
நீநா னெனப்படும் பேத மிலாமை நெறியுதவும்
ஆனா துயர்ந்தசற் பாவத்து மாலிங்க மாகிநின்றாய்
வானா டரியவ னேகர பீடத்து மாணிக்கமே
(26)
உலகிய றன்னை யொருவாது பற்று முளத்தொளியாய்
இலகிய நின்னைத் தெரிப்ப தொருவற் கெளிதுகொலோ
சிலைகவர் கையில் விளங்காய் பிடித்தல் செயுமவர்யார்
விலகுதிண் டோளணி கொண்டவ னேயென்கை வித்தகனே.
(27)
ஆனந்த வாரிதி யாகிய நீகை யமர்ந்திருப்ப
நானந்து தீவிட யந்தேடிச் சென்றுண்டு நைத்தழிதல்
வானந் தமுதங் கரத்தே யிருப்பதை மாற்றியருந்
தீநஞ் சருந்துத லன்றோ நிரஞ்சன சின்மயனே.
(28)
உருவஞ் சுவைநிறை வாகிய மூன்று முவந்துகொண்டு
மருவங்க முள்ள முருவக லாதுள்ள வாறுநின்றாய்
அருவன் றுருவன் றருவுரு வன்றி யறிவுருவாய்க்
கருவன் றுலகம் படைத்தாடு மென்கைக் கறைக்கண்டனே.
(29)

24. பொய்யினெறி செல்லாது-பொய்யான நெறிகளிலே செல்லாமல்.25. விடயங்கள் உண்டு உழலாது-விடயங்களை நுகர்ந்து சுழலாமல்.26. ஆனாதுயர்ந்த-அளவுபடாமல் மேலோங்கிய 27. ஒருவாது-நீங்காமல். தெரிப்பது-தெரியப்படுத்துவது. 28. ஆனந்தவாரிதி-இன்பக் கடல், நந்து-அழிந்துபோகிற. 29. மருவு அங்கம்-பொருந்திய உடல். உள்ளம்-மனம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்