முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
16. கைத்தலமாலை
[கைத்தலம் என்பது கையாகிய இடம். சிவபிரானுடைய திருவுருவத்தைத் தாங்கப் பெற்ற கை மிகச் சிறப்புடையதாகலின் அக்கையைக் குறித்துப் பாடப்பெற்றது இக்கைத்தலமாலை. இம்மாலை கலிநிலைத்துறை என்னும் பாவால் பத்துப் பாடல்களால் அமைந்துள்ளது.]
ஒருவிகற்பவெதுகைக் கலிநிலைத்துறை
முன்ன மாலய னிந்திர னமரர்கண் முனிவர்
பன்னு மாரணம் போற்றுதற் கரியநம் பரமன்
மின்னு லாவிய சடாடவிக் கடவுள்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(1)
அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயும்
முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன்
பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(2)
தன்னை மேவிவந் தனைபுரி பவன்செய றடுப்பான்
உன்னி மேல்வரும் வெந்திறற் கூற்றினை யுதைத்த
மன்னு மாலயற் கரியவன் வந்துவீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(3)
தன்னை நேர்வட காசிதென் கயிலைகே தாரம்
அன்ன மார்வய லம்பல நமன்றமர் வராமல்
கன்னன் மாமதற் றெறும்விழிக் கடவுள்வீற் றிருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(4)
கன்ன லாரமு தினுஞ்சுவை தருவதாய்க் காண்பான்
உன்னு மாலயற் கரியதா மொருமலை யுச்சி
மன்னு மோர்பவப் பிணிமருந் தெளிதுவந் திருப்ப
என்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(5)

1. பன்னும்-கூறும். மின்-மின்னல் போன்ற ஒளி. சடாடவி-சடைக்காடு. 2. ஏனம்-பன்றி. பீடம்-இருக்கை. கோடற்கு-கொள்ளுதலுக்கு. 3. வந்தனை புரிபவன்-மார்க்கண்டேயன்-உன்னி-உயிர்கவர எண்ணி. மன்னும்-நிலைபெற்ற. 4. அம்பலம். திருத்தில்லை. கன்னன்மாமதன்-கரும்பு வில்லையுடைய காமன். 5. பவப்பிணி மருந்து-பிறவி நோய்க்கு மருந்தாயிருக்குங்கடவுள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்