முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
கமன மழிந்து கறையற்று நிற்குஞ்
சுமனமதி னின்றிலகுந் தூயசர மென்றானோ.
(35)
மெய்ஞ்ஞான மாகி மிளிரும் பிரசாதஞ்
சுஞ்ஞான வத்தமதிற் றோன்றுமெனச் சொன்னானோ.
(36)
துற்பாவ நீங்கித் துணிவுபடு மத்துவித
சற்பாவ மாலிங்கஞ் சாருமெனச் சொன்னானோ.
(37)
ஆதார பீடங்க ளாறினுமவ் வாறிலிங்கம்
மீதாக வைத்து விளங்கச்செய் வித்தகனோ.
(38)
ஆறு முகங்களுமவ் வாறுசா தாக்கியமும்
ஆறு வருணமுமா மாறிலிங்க மென்றானோ.
(39)
பத்தனொடு மாயேசன் பார்ப்பரிய வாசாரம்
மெய்த்தகுரு நான்கும் விளங்குகுரு வென்றானோ.
(40)
பிரசா தியுமப் பிராணலிங்கி தானும்
உரைசால் சிவசரமு மோங்கிலிங்க மென்றானோ.
(41)
ஒழிந்தவங்க லிங்க மொருநான்கு நம்பால்
எழுந்தருளுஞ் சங்கமமென் றின்பந் தருவானோ.
(42)
உருவ முருவருவ முற்றறிதற் கெட்டா
அருவமென நின்றிடுமவ் வாறுமெனச் சொன்னானோ
(43)
மாசுதரு தூலாதி மானவிசு வாதியே
ஆசி றியாகாங்க மாதியா மென்றானோ.
(44)
விரிந்தன வெலாமும் விரிந்தமுறை சென்றே
ஒருங்கியங்க லிங்க வுபயமா மென்றானோ.
(45)

35. கறையற்று-குற்றமற்று. 36. சுஞ்ஞானம்-நல்லஞானம். 37. துற்பாவம்-தீயமன வியற்கை. சற்பாவம்-நல்ல மனவியற்கை. 38. மீதாக-மேலாக. 40. மெய்த்தகுரு-உண்மையான சற்குரு. 41. உரைசால் புகழமைந்த. 42.எட்டா-கண்டுணர முடியாத. 43. உற்றறிதற்கு-பொருந்தியறிதற்கு. 44. மாசு தரு-குற்றத்தைக் கொடுக்கிற. ஆசில்-குற்றமில்லாத. 45. ஒருங்கி-ஒடுங்கி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்