முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
கடத்தி னுபாதியா காயமுற்ற வாபோல்
அடுத்த வுபாதியா லங்கலிங்க மென்றானோ.
(46)
தங்கு மிலிங்கமாந் தற்பதமத் தொம்பதமே
அங்க மயிக்கிய மசிபதமென் றாண்டானோ.
(47)
ஆக முயிர்துரிய னாய்நின்ற போதெமைத்தான்
சோகமனத் தானாகத் தோன்றும் பெருமானோ.
(48)
அமைத்தபரஞ் சுத்தத் தசுத்தமதிற் சீவன்
தமப்பகுதி யிற்றோன்றுந் தத்துவங்க ளென்றானோ.
(49)
நிரஞ்சன சூனியமா நிட்களத்திற் சித்து
வருஞ்சுடர்சின் னாதாதி வாய்ப்பவெனச் சொன்னானோ.
(50)
மூலசித்து நாதாதி மூன்றும் புணர்ந்தாகு
மாலகற்றுஞ் சோதிமய மாலிங்க மென்றானோ.
(51)
அகராதி மாலிங்கத் தாகியவை கூடித்
தகவாமோங் கார சதாசிவமா மென்றானோ.
(52)
அந்தச் சதாசிவத்தி னைம்முகத்து மைம்பூதம்
வந்துற் றிதயத்தான் மாவருமிங் கென்றானோ.
(53)
அப்பூதம் பஞ்சீ கரித்திருபத் தைந்தாகி
மைப்பூணு மான்மாவை மன்னியிடு மென்றானோ.
(54)
ஆணவத்தான் மூடனா மாருயிர்க்கு முன்வினையால்
மாண வளிக்குமிறை மாயைவடி வென்றானோ.
(55)
மேலைவினை யாலுழலு மெய்யுயிர்க்குப் பாகமலக்
காலமுறச் சுத்தக் கரணமா மென்றானோ.
(56)
கூறுமனச் சுத்தமுறக் கொண்டுபிண்ட நாமத்தை
நூறு தலநெறியு நோக்குமெனச் சொன்னானோ.
(57)

46. கடம்-குடம். அடுத்த-பொருந்திய. 47. அசிபதம்-நீயாக விருக்கிறாய் என்னும் பதம். 48. ஆகம்-உடல். 49. பரஞ்சுத்தத்து-மேலான தூய்மையில். தமப்பகுதி-தமோகுணப்பகுதி. 50. நிரஞ்சனம்-ஒளியுடைமை. 51. மாலகற்றும்-மயக்கத்தைப் போக்கும். 52. அகராதி-அகரமுதலான. தகவாம்-தகுதிவாய்ந்ததான. 53. வந்துற்று-வந்து பொருந்தி. இதயத்து ஆன்மா-உள்ளத்தில் உள்ள ஆன்மா. 54. பஞ்சீகரித்து-பஞ்சீகரணமாகி; அஃதாவது ஒன்றொன்று /304ஐவ்வைந்தாகி. 55. ஆணவம்-அகங்காரம். மாண-பெருமை பொருந்த. 56. மேலைவினை-முன்பிறப்புக்களின்வினை. 57. மனச்சுத்தமுற-மனந் தூய்மையை அடைய.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்