முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
கிரியைமன பாவங் கிடைப்பரிய ஞானம்
மருவிவிடா தங்கம் வயங்குமெனச் சொன்னானோ.
(58)
ஞாதிருவு நின்றறியு ஞானஞே யங்களுமற்
றேதமற வென்று மிருந்தபடி வைப்பானோ.
(59)
வானேத்த வென்று மருவற் கரியபதம்
நானேத்த நல்குசிவ ஞானகுரு தேசிகனோ.
(60)
மிடியற் கெளிது விழியுற்ற பொன்போல்
அடியற்கு வந்திங் ககப்பட்ட வாரமுதோ.
(61)
கயிலைமலை மேவுங் கடைப்பிடியாற் சீர்சால்
மயிலைமலை மீதிங்கு வந்தமர்ந்த மாமணியோ.
(62)
எல்லாக் கலையுணர்ந்து மெய்தாப் பொருளையொரு
சொல்லாற் றிகழ்த்துதற்குத் தோன்றும் பெருமானோ.
(63)
சீலந் திகழ்ந்துமதிற் சின்னமின்றி யும்படியோர்
கோலஞ் சிவமெனவுட் கொள்ளுமருட் குன்றமோ.
(64)
மண்களிக்க நாயேன் மனங்களிக்கக் கண்டுகொண்டு
கண்களிக்க வந்த கருணைப் பெருங்கடலோ.
(65)
சம்பந்த னன்றொருநாட் டானுண்ட பானாளும்
எம்பந்த நீங்க வினிதமுது செய்தானோ.
(66)
வேண்டுவவெல் லாமுமாம் வெண்ணீ றளிப்பதற்குத்
தீண்டு மலர்க்கைச் சிவஞான தேசிகனோ.
(67)
இம்மை மறுமை யிரண்டும் பெறவெமக்குச்
செம்மைதர வந்த சிவஞான தேசிகனோ.
(68)
அரசமய மன்றி யகங்களித்தெஞ் ஞான்றும்
பரசமய மும்பணியும் பங்கயப்பொற் றாளானோ.
(69)
தானபங்க னென்னுமதன் றன்னாணை யைக்கடந்து
மானபங்கம் பண்ணும் வலியொன் றுடையானோ.
(70)

58. மருவி-பொருந்தி. வயங்கும்-விளங்கும். 59. ஞாதிரு-அறிவு; காண்போன். ஏதமற-குற்றம் நீங்க. 60. வான்ஏத்த-விண்ணுலகத்தவர் போற்ற. 61. மிடியன்-வறுமையுடையவன். ஆரமுது-சிறந்த அமுதம். 62. மாமணி-சிறந்தமணி. 63. திகழ்த்துதற்கு-சுட்டிக்காட்டி உணர்த்துதற்கு. 64. சின்னம்-அறிகுறி. படியோர்-உலகத்தோர். 65. மண்களிக்க-மண்ணுலகத்திலே உள்ளவர்கள் களிப்படைய. 66. எம்பந்தம்-எமது பாசத் தொடர்பு. 67. வேண்டுவ எல்லாமும்ஆம்-வேண்டியவைகள் எல்லாவற்றையும் அடைய. 68. செம்மை-சிறப்பு. 69. பரசமயம்-சைவ சமயமல்லாத பிறசமயம். 70. மானபங்கம் பண்ணும்-பெருமைக்கிழிவுண்டாக்கும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்