முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
18. சிவஞானபாலைய சுவாமிகள் தாலாட்டு
ஊனோ வுயிரோ வுயிர்க்குயிரோ வானந்தத்
தேனோ வமுதோ சிவஞான தேசிகனோ.
(91)
அண்ட முழுது மணுவிற் சிறியவாக்
கொண்ட பெருமைக் குணக்குன் றனையானோ
(92)
எங்கண் மலவிருளுக் கீண்டு மயிலைமிசைச்
செங்கதிர்போற் றோன்றுஞ் சிவஞான தேசிகனோ.
(93)
அற்பகலு மாறா தரனடியார்க் கீதலுறுங்
கற்பகமாய் வந்துதிருக் காஞ்சிநக ருற்றானோ.
(94)
பூணா மருள்வசவன் பூண்டசர பூசையன்று
காணா வெமக்கின்று காட்டுசிவ ஞானியோ.
(95)
விருப்புவெறுப் பின்மை விளக்கவென்புன் சொல்லைத்
திருப்பதங்கொள் கின்ற சிவஞான தேசிகனோ.
(96)
பொறியூடு செல்லுமனப் போர்க்களிற்றைத் தன்றாள்
தறியூடு நிற்பத் தளைந்தசிவ ஞானியோ.
(97)
பாடியுந்தன் சீர்த்தி பரவியுந்தன் பாதமலர்
சூடியுமிக் காலந் தொலைக்கவருள் செய்தானோ.
(98)
பொய்ம்மாயை யென்னும் புலியின்வாய்ப் பட்டேனைக்
கைம்மாறி லாமற் கருணைகொடு மீட்டானோ.
(99)
பத்தியுந்தன் பங்கயப்பொற் பாதமே பாடுகின்ற
சித்தியுந்தத் தாளுஞ் சிவஞான தேசிகனோ.
(100)

91. உயிர்க்கு உயிர்-உயிர்களை வாழச் செய்பவன். 92. அண்டம்-உலகம். 93. மலஇருள்-ஆணவமல இருள். 94. அல்-இரவு. ஈதலுறும் கொடுக்கும். 95. அன்று காணா-வசவர் பூசை செய்த அஞ்ஞான்று பார்க்காத. 96. விருப்பு வெறுப்பு இன்மை விளக்க-மெய்யறிவாளர்கள் விருப்பு வெறுப்பு அற்றவர்கள் என்னுந்தன்மையை விளக்கிக்காட்ட. 97. பொறி-மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம்புலன். தறி-கட்டுத்தறி. தளைந்த-கட்டிய. 98. சீர்த்தி பரவியும்-புகழைப் பாடியும். 99. பொய்ம்மாயை-உண்மையில் இல்லாத மாயை. 100. பத்தி-திருவடியில் அன்பு. சித்தி-காரியசித்தி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்