1. சோணசைலமாலை |
|
|
தோற்றிடும் பிறவி யெனுங்கடல் வீழ்ந்து துயர்ப்பிணி யெனுமலை யலைப்பக் கூற்றெனு முதலை விழுங்குமுன் னினது குரைகழற் கரைபுக விடுப்பாய் ஏற்றிடும் விளக்கின் வேறுபட் டகத்தி னிருளெலாந் தன்பெய ரொருகாற் சாற்றினு மொழிக்கும் விளக்கெனுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(56) |
|
|
கந்தர மிருந்து மடகுநீ ரயின்றுங் கரநிலத் தமைத்திரு பதமும் அந்தர நிமிர்ந்து நின்னிலை யறியா ரரும்பவ மொழியுமோ வுரையாய் இந்திரன் வனத்து மல்லிகை மலரி னிண்டைசாத் தியதென நிறைந்த சந்திரன் முடிமேல் வந்துறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(57) |
|
|
கூம்புறு கரமு மலர்ந்திடு முகமுங் கொண்டுநின் றனைவலம் புரிவோர் மேம்படு சரண மலர்ப்பொடி மேனி மேற்படிற் பவம்பொடி படுமே பூம்பொழிற் புகலிக் கிறைவனா னிலஞ்சேர் புண்ணியத் தலங்களி னடைந்து தாம்புனை பதிகந் தொறும்புகழ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(58) |
|
|
|
56. புறவிருளை ஓட்ட ஒளி வேண்டுவது போல அகவிருளை யோட்ட இறைவனாகிய ஒளிவேண்டும். ஆகவே இறைவனை ‘விளக்கு’ என்றார். ஆதலால், அகவிருளை யொழிக்க இறைவன் பெயரை ஒருமுறை கூறினும் போதுமென்பார் ‘அகத்தின் இருளெலாந்தன்பெய ரொருகாற்சாற்றினும் ஒழிக்கும் விளக்’ கென்றார் என்க. ஏற்றிடும்-இல்லங்களில் ஏற்றப் பெறுகிற. குரைகழல்-ஒலிக்கும் வீரக் கழல். 57. நிலையாவது ஆன்மாக்களுக்கு வீடு பேறளித்தற் பொருட்டு நிக்கிரகானுக்கிரகம் பூண்டு நிலவு மியல்பு. கந்தரம்-குகை. அடகு-இலை. அயின்றும்-உணவாகக் கொண்டும். 58. ஆளுடைய பிள்ளையார் பதிகந்தோறும் புகழ்ந்தது ஒன்பதாவது திருப்பாடறோறுங்காண்க. கூம்புறு-குவித்தல்பொருந்திய. பவம்-பிறப்பு.
|
|
|
|