முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
கானமே மருவும் விலங்கினுங் கடையேன்
      கற்பவை கற்றிலேன் விடய
ஞானமே யுடையே னறிஞரைக் காணி
      னாணிலே னுய்யுநா ளுளதோ
வானமே யளவு நெடுங்கிரி மலய
      வாதமோ துறுபவர் கட்குத்
தானமே யுதவ வளர்ந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(59)
விழைவொடு மறஞ்செய் துய்கவென் றுரைக்கும்
      விதியினைக் கவளமுண் கெனவுங்
கழைசுளி நெடுநல் யானையின் முனிந்து
      கடக்குமென் பவமொழிந் திடுமோ
மழைமுகில் வந்து தவழ்ந்துவிண் படரு
      மலிதரு புகையென வெழுந்து
தழலுரு வுண்மை விளக்குறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(60)
வாத்திய முழங்கச் சிவிகையுங் கரியு
      மாறியூர்ந் துலவிவாழ்ந் தவரும்
ஏத்திய மொழியோ டிரக்கையா னின்குற்
      றேவலே வாழ்வென வறிந்தேன்
பாத்திய மணிகள் கொண்டிழைத் திலங்கும்
      பாரவா சிகைமணி மேகஞ்
சாத்திய தெனவில் வளைந்துறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(61)

59. வாதம் ஓதுறுபவர்கட்குத் தானம் அளித்திட நெடுங்கிரிமலைய வளர்ந்தெழுஞ் சோணசைலன் என்க; வாதம் ஒதுறுபவர் பிரம விட்டுணுக்கள்; வாதம் மோதுறுபவர் எனப் பிரித்துத் தென்றலைத் தாக்கும் முனிவர் என்றலுமாம். 60.0, யானைபோல் விதியினை முனிந்து கடக்குமென்க. உண்க என்பதன்ஈறு தொக்கது. விழைவு-விருப்பம். சுளி-சினக்கின்ற. 61. பாத்திய மணி-தேர்ந்தெடுத்த நவமணி. வாசிகை-திருவாசிகை. மணி மேகம்-மணிகளைப் பொழியும் சம்வர்த்தம். வானவில் இம்மலை யிறைவனுக்குத் திருவாசிகைபோல் விளங்குகின்றதென்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்