முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
குலத்தினிற் பிறந்து மலகினூல் கற்றுங்
      குணத்தினிற் சிறந்தநல் விரத
பலத்தினிற் கவர்ந்து நின்னடி யவர்க்குப்
      பரிவிலார் கதியிலா தவரே
கலத்தினிற் பொலிந்த விமயமீன் றெடுத்த
      கன்னிநுண் ணிடைமிசைக் களபா
சலத்தினிற் குறுதி கொடுத்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(62)
மூடக விருளோ டுன்னையின் றுண்ணா
      முலையர சாலகற் றுவலென்
சூடரு மொழியா லடைந்தனன் றமியேன்
      சூள்வழு வாதுநீ யருளாய்
வீடுறுங் கவரி கீழ்விழ வுறல்கார்
      மிசையனம் பன்றிதா மாறித்
தாடலை துருவ வடைதனேர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(63)
ஐயநுண் மருங்குன் மாதர்மேல் வைத்த
      வாதர வுன்பதாம் புயத்தும்
மெய்யுறு நறுமென் கலவையின் விருப்பு
      வெண்டிரு நீற்றினும் வருமோ
கொய்யுறு தினைவீழ்ந் திடுபசுங் கிள்ளைக்
      குழுக்கடோ ரணமென வெழுந்து
தையலர் கடியப் பறந்துறுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(64)
கனலினூ டமைத்த விழுதென வுருகக்
      கற்றதின் றுள்ளமென் கரங்கள்
புனலுமாய் மலருங் கொடுநினைப் பூசை
      புரிந்தில வென்செய்கோ வுரையாய்
சினவுநோய் மருந்து வேறுகொண் டிருக்குஞ்
      சிலம்புக ணாணவுட் கொள்வோர்
சனனநோய் மருந்தா யெழுந்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(65)

62. கவர்தல்-வேட்கைப் பெருக்கம். கலத்தினிற் பொலிந்த கன்னியென முடிக்க. தனங்களுக்கு உறுதி கொடுத்தல், தம் வடிவங் குழைந்து அவைகட்குத் திண்மைபயத்தல். அலகில்-கணக்கில்லாத, கலம்-அணிகலம். களபாசலம்-களபமணிந்த கொங்கை, 63. அகவிருளோடு சூள்மொழி பகர்ந்தடைத்தனன் எனவும். கார்மிசையுறலெனவும் கொள்க. வீடுறல்-வழுவல். துருவ-தேட. 64. மாதர்கள் மேல்வைத்த அன்பு உன் திருவடியினிடமும், அவர்கள் மெய்க்கணுள்ள கலவைச்சாந்தின் மேல்வைத்த அவா நின் திரு நீற்றினிடமும் வருமோ என இரங்குவது காணத்தக்கது. மருங்குல்-இடை; நுண் என்பது நுண்ணிய. 65. மலைக்கண் நோயைப்போக்க மருந்து வகைகளுண்டு. ஆனால், சினத்துக்கும், பிறவிநோய்க்கும் அதனிடம் இல்லை. அதனால் “சிலம்புகள் நாண” என்றார். சிலம்பு என்பது மலை. இறைவனிடம் எல்லா நோய்கட்கும் மருந்துண்டு. இழுது-வெண்ணெய்; சனனம்-பிறவி; கனலினூடு என்பதில் ஊடு ஏழனுருபு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்