முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
19. சிவஞானபாலையசுவாமிகள் நெஞ்சுவிடுதூது
           இலங்கு முனிவரர்கட் கெல்லாம் - நலங்கொள்
           பெருமை நினைத்துணைக்கொள் பெற்றியா லன்றோ
           உரிமைநீ யன்றிவே றுண்டோ - அருமையென்ப
           தில்லையுனக் கெவ்விடத்து மென்மனமே யாதலினால்
           நல்ல பெரியசிவ ஞானிபால் - செல்லவுனை
           வேண்டுவேன் தூதாக வேதக் கிளியைவிடில்
           காண்ட லரிததனாற் கண்டாலு - மாண்டதுதான்
           ஒன்றாக வோதா துரைக்கும் பலமயங்கச்
           சென்றாலு நீயேதான் செல்லாமல் - நின்றாலும்
175.       நீயே பிறிதில்லை நெஞ்சமே யெற்பயந்த
           தாயே யவனிடங்கள் சாற்றக்கேள் - பேயேன்
           எழுநகரி னுட்சிறந்த தென்பதலாற் சீர்மை
           முழுது மியம்ப முடியா - தழகுறுவேல்
           கந்தனுயர் கச்சிவளங் காற்கூ றளவுரைப்பன்
           ஐந்துகரன் சொல்வ னரைக்கூறு - நந்தமரன்
           கூறுடையா ளோர்முக்காற் கூறுரைப்பள் முற்றுமிள
           ஏறுடையான் சொல்வ னெனவனந்தன் - வீறுடைய
           நாவா யிரங்கொண்டு நானுரைத்தல் காற்கீழென்
           றோவாத நாணாகி யோடியே - தாவாத
180.       வேலையிடை வீழவவன் மேல்வீழ்ந்து துஞ்சினான்
           போல வரிகிடப்பப் பொங்குபுகழ் - ஞாலமெலாம்
           நண்ணவொரு காசி நடுமெய்ஞ் ஞகரமுறும்
           எண்ண வரிய வெழினகரும் - மண்ணுலகில்
           முன்னோர் தொடைப்பொருளை முற்றுங் கரந்துரைத்துப்
           பின்னோ ரெமதென்னும் பெற்றிபோல் - அன்னோபின்
           வந்திளைய காசி மரிப்பார்க்கு முத்திபதந்
           தந்திடுவ னென்றுமிகு தன்செயலை - முந்துகொடு
           சென்றுபர தேயத்திற் சேர்ந்திருப்பச் சீர்மலிந்து
           மன்றன் மலரு மணியணியுந் - துன்றுநறும்
185.       குங்குமமுஞ் சந்தனமுங் கோலம் பெறப்புனையா

171.170-175. பெற்றி-பெருமை. 176.175-180. பயந்த-பெற்ற. அரன்கூறுடையாள்-உமாதேவி. அனந்தன்-ஆதிசேடன். வீறு-பெருமை ஓவாத-ஒழியாத. வேலை-கடல். துஞ்சினான்-செத்தான். 181.180-185. அரி-திருமால். முன்னோர் தொடைப் பொருள்-சான்றோர்களுடைய பாட்டின் பொருள். கரந்துரைத்து-ஒளித்துக்கூறி மரிப்பார்-இறப்பவர். மன்றல் மலர்-மணந்தங்கிய மலர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்