முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
[பிள்ளைத்தமிழ் என்பது தமிழில் உள்ள 96 வகை நூல்களில் ஒன்று. அது குழந்தையாகப் பிறவாத சிவபிரானையொழித்து ஏனைய கடவுளர்கள்மீதும் பெரியோர்கள் மீதும் பாடப் பெறுவது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம், வாரானைப் பருவம், அம்புலிப் பருவம், சிற்றிற் பருவம், சிறுபறைப் பருவம், சிறுதேர்ப் பருவம் என்னும் பத்துப் பருவங்கள் கொண்டது. பெண்பால் பிள்ளைத் தமிழுக்கு இறுதிப் பருவங்கள் மூன்றுக்குப் பதிலாகக் கழங்கு, அம்மனை, ஊசல் என்னும் பருவங்கள் அமைத்துப் பாடப்பெறும். இப்பிள்ளைத் தமிழ் துறவியின்மீது துறவியால் பாடப் பெற்றதாகலின் தத்துவப் பொருள்கள் அமையப் பெற்றது]
காப்பு
அத்திமுகத் துத்தமனை
நித்தம்நினை சித்தமே.
 
திருமால்
திருமா மறையு மாகமமுந் தெருட்டு பொருளோர் முடிவாகத்
       தெளிவில் சமயர் தமின்முரணித் தியங்கி யபேதம் பேதமென
வருமால் வாத மயலொழிய மலர்வாய் மலரப் பெருங்கருணை
       வடிவாய் வந்த சிவஞான வள்ள லிணைத்தாண் மலர்க்காக்க
கருமா முடக்கொம் பொழுகமுதக் கதிர்வெண் டிங்கட் கண்ணிபுனை
       காலத் தவன்சே வடியிற்செங் கமல விழியொன் றிடந்தணிந்தும்
பொருமா மழவெள் விடையாகிப் பொறுத்துந் தொழும்பு தலைநின்ற
       பொன்னந் திருமார் புடைக்கமஞ்சூற் புயல்வண் ணத்தெம் பெருமானே.
(1)

1. காப்புப் பருவம் (குழந்தையைக் காக்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுவது இப்பருவம்.)1. தெருட்டு பொருள்-தெளிவிக்கும் பொருள். சமயர்-பல சமயத்தவர். முரணி-மாறுபட்டு. தியங்கி-மயங்கி. மால்வாதம்-மயக்கம் பொருந்திய சொற்போர். திங்கட்கண்ணி-திங்களாகிய மாலை. இடந்தணிந்து-தோண்டிச் சார்த்தி. பொரும்-போர் செய்கிற. மழவெள்விடை-இளமை தங்கிய வெள்ளிய காளை. தொழும்பு-தொண்டு. பொன்-திருமகள். கமம்சூல்-நிறைகருப்பம். புயல் வண்ணம்-முகில்நிறம்-

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்