முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
மல்லிகார்ச்சுனேசுரர்
உடற்கு விளையுஞ் சூர்தாக்கு மொழித்தற் கரிய பலபிணியு
       முடற்று பசிநோய் முதலனவு முணர்வைப் பிணித்துப் பிறப்பெனுமாழ்
கடற்கு ளழுத்தி யுயிர்சிவத்திற் கலப்பைப் பிரித்து விடுமலமுங்
       கழலக் கருணை புரிந்தெம்மைக் காக்குஞ் சிவஞா னியைக்காக்க
முடக்கு மடிக ணிமிர்த்தெழுந்து முள்காந் திருந்து களஞ்சுருக்கி
       முழைவாய் பிளந்து செவிநிமிர்த்து முறுக்கி வெடிவால் சிறிதடித்து
விடக்கு விரும்பு புலிபாய விரையு முண்மா னுடைமதியம்
       வெருவுற் றகலும் பருப்பதமாம் விலங்கன் முக்கட் பெருமாளே.
(2)
உமாதேவியார்
இளைக்கு மருங்கு லொருமடந்தைக் கெய்து தவள முகிற்கூந்த
       லிருஞ்சூன் முகிலி னிருள்படைப்ப விருண்ட வடியே னுளம்விளர்ப்பத்
திளைக்கு மலர்க்கட் கருணைமடை திறக்குங் குணப்பொற் குன்றையுயர்
       சிகர மயிலைச் சிவஞான தேவன் றனைநா டொறுங்காக்க
விளைக்குந் தவத்தாற் பால்தனக்கு விரும்பிக் கொடுத்த கொழுநன்மணி
       மிடறே போல வெனதுபுன்சொல் விடமுண் கின்ற திருச்செவியை
முளைக்குந் தரள நகைவாயான் முதிர்தீஞ் செய்யு ளமுதூட்ட
       முன்னம் பிள்ளைப் பெருமாளை முலைப்பா லூட்டு மொருதாயே.
(3)
விநாயகக்கடவுள்
நீர்வாழ் வரிச்செங் கயல்கவர நிற்குஞ் சிரல்வா ரிதிகலங்க
       நிலைபேர்ந் துலவுந் திமிங்கிலப்பேர் நெடுமீன் கவர்வா னிற்பதெனப்
பார்வாழ் மக்கட் பரப்பெல்லாம் பணிவேந் தாயின் மொழிப்படுசீர்
       பாடத் தொடங்கு மெனதிடத்தும் பழிப்பில் சிவஞா னியைக்காக்க
தார்வாழ் திருப்பொற் கோயிற்குத் தடமா மதிலிற் பொலிமார்பத்
       தனிவான் முகிலுஞ் சரோருகப்பொற் றவிசிற் பசும்பொற் குவடும்வான்
ஊர்வா ழரசு முனிவரரு மொருதஞ் செயற்குக் காப்பாக
       வுவந்து முதற்கட் பரவுபுக ழொருத்தன் முகத்தெம் பெருமாளே.
(4)

2., உடற்று-வருத்தும். பிணித்து-மயக்கிக் கட்டி. கழல-அகன்று நீங்க. முள்காந்திருந்து-மௌனமாக இருந்து. களஞ்சுருக்கி-கழுத்தைச் சுருக்கி. முழைவாய்-குகையைப் போன்ற வாய். விடக்கு-ஊன். உள் மானுடை மதியம்-உள்ளே மானையுடைய திங்கள். வெருவுற்று-அஞ்சி. 3. தவளமுகிற் கூந்தல்-வெண் முகிலைப் போன்ற கூந்தல். சூன்முகில்-நீருண்ட கரிய முகில். விளர்ப்ப-வெளுக்க. உயர் சிகரம்-உயர்ந்த முடி. மணிமிடறே போல-நீலமணி போன்ற கரிய கழுத்தைப் போல். தரளநகை-முத்தைப்போன்ற பற்கள். 4. பார்வாழ்-உலகத்திலே வாழுகிற. மொழிப்படு-சொல்லில் அமைந்த. சரோருகம்-தாமரை. கயல் கவர-மீனைப்பற்ற. சிரல்-மீன் கொத்திப் பறவை. தவிசு.இருக்கை. ஒருத்தல்-யானை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்