முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
சுப்பிரமணியக்கடவுள்
பாயுங் கவனக் கடியமனப் பரிகா வாமற் கொடுவிடயப்
       பகைகா வாமற் பிறருரைக்கும் பழிகா வாம லிருதாளுந்
தேயும் படிசென் றிடையின்றிச் செல்வச் செருக்கர் கடைகாக்குஞ்
       சிறியேற் காக்குஞ் சிவஞான தேவன் றிருமே னியைக்காக்க
வாயும் மனமுந் தொடர்வரிதாய் வருதல் போத லிரவுபகல்
       வளர்தல் குறைதல் வெறுப்புவப்பு வறுமை செல்வ மிலாததனை
ஆயுந் தமிழக் குறு முனிவற் கறித லறித லிலாமைபோ
       யறிவே யாகி யுலகொழிய வருள்செய் சுடர்வேற் பெருமாளே.
(5)
அல்லமதேவர்

வேறு
அகரவுயி ரனையபரி பூரணத் தீர்த்தனை
       யடிநிழலி லடையுமெம தாருயிர்க் காப்பனை
நிகரிலல மயனையழி யாதமெய்க் கூத்தனை
       நிகழுமனு பவனையரு ளாளனைப் போற்றுதும்
நகரவர சிடையமரும் வாசனைக் காற்றெனும்
       நடையிரத மதனன்வலி வீயுமெய்க் காட்டனை
மகரமனை சுவறவெறி வேலுடைச் சூர்ப்பகை
       மயிலைமலை மருவுசிவ ஞானயைக் காக்கவே.
(6)
வசவதேவர்

வேறு
விழுப்பநிலை குறிகுணங்க ணாடிடா தென்றும்
       வேண்டுவன வேண்டியாங் களித்தரவே டத்தர்
குழுக்கடமக் கன்புசெய்நந் தலைச்சுமைவாங் குபுதான்
       கொண்டவனென் றரியசிவ ஞானியைக்காத் தளிக்க
விழிப்பினம தொருநாமம் புகல்பவரைப் பிறப்பி
       லெடுக்குநமக் கிஃதரிதன் றெனச்சென்று கடிது
வழுக்கிவிழு பவளையெடுத் தஞ்சலோம் பென்ற
       வசவதே சிகனெனுமெங் குடிமுழுதாள் பவனே.
(7)

5. பாயும்-பாய்ந்து செல்லும். கவனம்-போக்குவரவு. கடிய-விரைந்து செல்லுந் தன்மையுள்ள. மனப்பரி-மனமாகிய குதிரை. செருக்கர்-செருக்கையுடையவர்கள். கடை-கடைவாசல். 6. காப்பனை-காக்கின்றவனை. மதனன்வலி வீயும்-காமன் வலியழியும். மகரமனை-மகர மீன்கட்கு வீடாக விளங்குங்கடல். சூர்ப்பகை-முருகக் கடவுள். 7. விழுப்பநிலை-மேலாகிய நிலை. அரவேடத்தர்-சிவக்கோலம் பூண்டவர்கள். குழுக்கள்-கூட்டம். வாங்குபு-வாங்கும் பொருட்டு. அஞ்சல் ஒம்பு-அஞ்சுதலை விடு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்