முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
தேவாரமருளிய மூவர்
கிளக்கிலா நாமணியி னாவே யாகக்
       கேட்கிலாக் காதூசி யின்கா தாக
வளர்க்குமா புகழுலகிற் பரப்பா நின்ற
       மயிலைவரைச் சிவஞான தேவற் காக்க
அளக்கிலாத் தமதுரைபூந் தொடைபு னைந்த
       வரசுபோன் றல்லனபுன் குறும்பு போலக்
கொளக்குறையாப் பெருஞ்செல்வ மெமக்கா ஞானக்
       கூத்தனுறு பதிகள்பல பாடியமூ வருமே.
(8)
மாணிக்கவாசக சுவாமிகள்
அருந்தமிழ்நா டொருகோடி தவஞ்செயவந் ததிர்வெள்
       ளருவிதூங் குயர்மயிலை வரையினமர் விளக்கைப்
பரந்துபடு மிகுபாச ஞானமொடு மற்றைப்
       பசுஞானங் கடந்தசிவ ஞானியைக்காத் தளிக்க
விரிந்தமறை யொருநான்கு மெழுதுகில மெனவோர்
       வீறுடைப்பொற் கொன்றைபுனை விரிசடையோ னெழுதத்
திருந்துதமிழ்க் கோவையொரு நானூறு முரைத்த
       திருவாத வூரனெனுஞ் செழுமலர்க்கற் பகமே.
(9)
சென்னவசவ தேவர்

வேறு
அறிவுயிர் கரண முடலொடு பொறிகள்
       சிவமென வுதவு தானியைக் காத்தெமர்
வழிவழி யடிமை யெனவருள் புரியு
       மொருவனை யெமது பாவனைக் கேற்றிடு
மமுதினை மணியை யடியவ ருயிரை
       யுயர்சிவ சமய நாதனைப் பார்த்துறு
குறிகுண நிலைகள் குருசிவ சரணர்
       தமையிகழ் பவரை வேறெனத் தாக்கியை
வளர்தரு தனது குணவருள் கனலி
       னழல்புனன் மருவு மாறெனத் தாட்டுணை
குறுகிடு பவரை யடைவுற வுலகின்
       வருசென வசவ தேவனைப் போற்றுதும்
பொறியொரு புடையில் வளையொரு புடையி
       லிரவியி னிருளை நாமறத் தீர்த்தெரி
மணிமிளிர் திகிரி யொடுபல வணிகண்
       முடியொரு புடையி லாருயிர்க் காப்புறு
புயனிற வடிவ வரியொரு புடையில்
       விழவர வணையை வானுறத் தூக்குபு
மறிதிரை கதறு கடலிடை யுதறு
       பொறிமயில் கடவு வீரன்மெய்ச் சீர்த்தியன்
மலைமுனி முருக குருபர குமர
       சரவண பவவெ னாமிகப் போற்றிட
மறைமொழி யருள்செ யறுமுகன் மருவு
       மயிலைவ ருசிவ ஞானியைக் காக்கவே.
(10)

8., கிளக்கிலா நா-பேசாதநா. கேட்கிலாக்காது-ஊசியின் காது. அளக்கிலா-அளக்க முடியாத. ஞானக்கூத்தன்-இறைவன். 9. தூங்கு-இழிகின்ற. பரந்துபடு-பரவியுள்ள. எழுதுகிலம்-எழுதவில்லை. வீறுடை-பெருமையுடைய. கோவை-திருக்கோவையார். 10.கரணம்-அந்தக் கரணம். பொறிகள்-ஐம்பொறிகள்.தாக்கியை-தாக்குபவனை அரியொரு புடையில் விழ-திருமால் ஒரு பக்கத்திலே விழ. அரவணை-பாம்புப் படுக்கை. தூக்குபு-தூக்கி.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்