| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
ஆற்றற் பெரியோ ராற்றுவார்க் காற்றல் பசியை யாற்றுதலென் றறைந்த மொழியைக் கடந்துசிவ னடியா ரெனுநல் விருந்தழைத்துச் சோற்றுக் குவடு மொலைத்தசிறு தொல்லைப் பூத மொருகோடி. தொலைத்தற் கரிய செஞ்சாலிச் சோறுங் கறியுங் கைகவிப்ப ஊற்றற் கமைத்த பாறயிர்நெய் யுதிர்தீங் கனியு முறைமுறையே யொழுகு பந்தி பலவிருத்தி யுவந்து படைத்துத் தீப்பசியை மாற்றிப் பெருஞ்சீர் பெறுதற்கு வல்லாய் தாலோ தாலேலோ மயிலை வரையிற் சிவஞான மணியே தாலோ தாலேலோ
|
(1) |
| |
| |
அருவா யுருவா யவையன்றி யறிவாய் நிற்கு மவிர்சடிலத் தண்ணல் பெருஞ்சீ ரிசைப்புலவ ரறைதல் பட்டாங் காதல்போல் மருவார் மலர்த்தண் பொழின்மணிநீர் வாவி பசும்பொன் மதின்மாட மணிமா ளிகைகோ புரநெடுந்தேர் மறுகு முதலா யினவற்றின் பொருவா வளங்க ளிறும்பூது புகல்வார் புகலும் படியெல்லாம் பொருளே யாகி யேனையபோற் புராண மலது மறைகூறுந் திருவார் கச்சி நகரிடங்கொள் செல்வா தாலோ தாலேலோ தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.
|
(2) |
| |
|
| |
1. “ஆற்றுவா ராற்றல்” என்னுங் குறள். குவடு-மலை, செஞ்சாலி-செந்நெல். சோற்றுக்குவடு-சோற்றாலாகிய பெருங்குவை. பந்தி-வரிசை. 2. அருவாய் உருவாய்-அருவமாயும், உருவமாயும். பட்டாங்கு-உள்ளவாறு ; புராணமலது மறைகூறும்-புராணங் கூறுதலேயன்றி மறைகளுங் கூறும். அவிர்சடிலம்-விளங்குகிற சடைமரு-மணம். பொருவாவளங்கள்-ஒப்பில்லாத சிறப்புக்கள். ஏனைய போல்-பிறவற்றைப்போல். திருவார்கச்சி-ஈண்டுப் புகழாகிய திருநிறை கச்சி என்பது பொருள்.
|
|
|
|