| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
ஆர்க்கு மதுரச் சங்கமளித் தரவ மடுத்த பெருங்கங்கை யாறு மடுத்துப் பிறைத்தோணி யமர்ந்து சடைச்செந் துகிப்படர்ந்து பார்க்கு முமைகட் கயலுலவும் பழைய கருணைக் கடலகத்துப் படிந்து பரக்கும் புறச்சமயப் பாம்பு பதைப்ப விடித்துமயல் போக்கு மயிலை வரையிவர்ந்து பொருண்மா மாரி மிடிக்கோடை பொன்றப் பொழிந்து புகழ்வெள்ளம் பொருப்பு வாளக் கரைவாவி தேக்கு முகிலே யமுதேசெந் தேனே தாலோ தாலேலோ தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.
|
(3) |
| |
| |
முதையா மெமது மனப்புலத்தை மூடுங் காம வெகுளிவன முற்றுங் கருணைத் தீக்கொளுவி முருக்கித் திருத்திச் செருக்கெனுமா மதயா னையைவந் தழியாது மறிப்பப் பொறைவே லியுமமைத்து வலியா சிவமந் திரப்படையால் வாய்ப்ப வுழுது சிவவிதையை விதையா முளைப்பப் பிறதெய்வ விரவு களைகட் டறவளர்த்து வீடாங் கனிகொள் பருவத்து விடயக் கரவர் புகுந்ததனைச் சிதையா வண்ணங் காத்தளிக்குந் திறத்தாய் தாலோ தாலேலோ தேடற் கரிய சிவஞான தேவே தாலோ தாலேலோ.
|
(4) |
| |
|
| |
3. ஆர்க்கும்-ஒலிக்கும். அரவம்-ஒலி. உமைகட் கயல்-உமையம்மையின் கண்ணாகிய மீன். மயல்போக்கும்-மயக்கத்தை நீக்கும். பொன்ற-கெட. 4. முதை-பழைய நிலம். வனம்-காடு. முருக்கி-அழித்து. பொறை-பொறுமை. கட்டு-களைந்து. வீடு-மோட்ச வீடு. விடயக்கரவர்-புலவஞ்சகர். சிதையா வண்ணம்-அழித்தொழிக்காதபடி.
|
|
|
|