முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
வாங்கு சிறுவெண் மதிக்குழவி
       வயங்கு முடியு மகன்மாள
மலர்ந்த விழிசேர் திருநுதலு
       மதிநேர் சங்கக் குழைப்பணியே
தாங்கு செவியுங் கடற்காளந்
       தரித்த மிடறுங் கனன்மழுமான்
றயங்கு கரமுந் தனிக்கேழற்
       றடங்கோ டிமைக்குந் திருமார்பும்
ஓங்கு சிவவெம் புலியதளொன்
       றுடுத்த வரையு மான்மலர்க்க
ணுற்ற வடியு நினதுண்மை
       யுணரா வஞ்சஞ் செயக்கருணை
தேங்கும் விழிக ளேயதனைச்
       செய்யா தாலோ தாலேலோ
தேடற் கரிய சிவஞான
       தேவே தாலோ தாலேலோ.
(5)
வேறு
மீனெ னப்பிறழ் மதர்நெடுங் கட்சிறு
       வின்னுதற் றுவர்வாயார்
வேட்கை நோய்தவிர்ப் பவர்க்குமட் புனலிடை
       வேறுசெய் தேறேபோல்
ஊனு யிர்க்கொரு பிரிவுதந் துதவுறு
       முத்தமா தாலேலோ
வுருவ மாகிவந் தென்கருங் கன்மன
       முருக்குவாய் தாலேலோ
வான ளக்குறுங் காலென வெய்திடும்
       வைந்நுதிக் கணையென்ன
வாரி யுட்புகுங் குடமென வுட்புற
       மருவிநின் றகலாமல்
நானி னைப்பரும் பரசிவத் துறவரு
       ணற்றவா தாலேலோ
நகரி நாயகக் காஞ்சிமா நகர்ச்சிவ
       ஞானியே தாலேலோ.
(6)

5. மதிக்குழவி-பிறைத் திங்கள். வயங்கும்-விளங்கும். மதன்-காமன். கடற்காளம்-கடலில் தோன்றிய நஞ்சு மிடறு-கண்டம். கேழல்-பன்றி. தடங்கோடு-பெரிய கொம்பு. மால் மலர்க்கண்-திருமாலின் கண்ணாகிய தாமரை மலர். 6. பிறழ்-புரளுகின்ற. மதர்நெடுங்கண்-களிப்புப் பொருந்திய நீண்ட விழிகள். துவர்-பவழம். தவிர்ப்பவர்க்கு-நீக்குபவர்கட்கு. உத்தமா-உத்தமனே! எய்திடும்-எய்யும். வைநுதி-கூரிய முனை. நகரி நாயக-நகர்கட்கெல்லாந் தலைமையாகிய.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்