| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
அருந்து மமுதி னினியதா யன்போ டளைந்து படிறிலதா யறைந்த மொழிதத் துவமசியி னன்றி மாறா வியல்பினதாய்ப் பொருந்து மறையா முடம்பிற்குப் புக்க வுயிராய்ப் பவக்கடற்குப் புணையாய்க் கயிலை வழித்துணையாய்ப் பொலிந்த திருவஞ் செழுத்தென்னும் பரந்த புகழ்மந் திரவேந்து பவனி போதுந் திருமறுகாய்ப் பனிவெண் டிங்கட் சடைமுடியோன் படிவ முணர்த்தும் விளக்காகித் திருந்து பவளத் திருவாயாற் செல்வா முத்தந் தருகவே திளைக்குங் கருணைச் சிவஞான தேவா முத்தந் தருகவே.
|
(1) |
| |
| |
எல்லாத் தேவர் தமதுயிரு மிமைப்போ தினிலுண் கரியகடு வீன்ற வோதைக் கடன்முத்த மெனைத்தும் வேண்டே மெழின்மதவேள் வில்லாய்க் கொலைசெய் தொழில்படைத்த வேழக் கரும்பின் வெண்முத்தம் விரும்பே மலர்ப்பூம் பொழிற்றிருநெல் வேலிப் பதியின் வேய்முத்தம் அல்லாற் கருங்காட் டுயிரனைத்து மலமந் தழியக் கதழெரியை யாக்க நெடிய வேய்முத்த மணுகேஞ் சிறிது மருளின்மொழி செல்லாப் பவளத் திருவாயாற் செல்வா முத்தந் தருகவே திளைக்குங் கருணைச் சிவஞான தேவாமுத்தந் தருகவே.
|
(2) |
| |
| |
களரின் முளைத்த செங்கரும்பு கண்ணாற் பயந்த விளங்குமரன் கதிர்கான் றெழுசெம் பரிதியுடல் கறுப்பச் சிவந்த சுடரிலைவேல் தளிரி னியல்வென் றுலவுசிறு தவளை வாய்ச்சில் லரிக்குரற்பூஞ் சதங்கைச் செம்பொற் சிறுதண்டைத் தாளென் றலைமேல் வைத்தபிரான் விளரி வரிவண் டிமிர்குவளை வியன்சீர்த் தணிகைக் கருங்கல்லின் மிசைப்பூப் பித்தா னெனக்கருதி வினையே னுள்ளக் கல்லிடைத்தாள் முளரி மலர்கள் பூப்பித்த முதல்வா முத்தந் தருகவே முருகன் மயிலைச் சிவஞான முனிவா முத்தந் தருகவே.
|
(3) |
| |
|
| |
1. படிறிலதாய்-பொய்யற்றதாய். தத்துவமசி-அது நீயேயாக விருக்கிறாய் என்னும் மறைமொழி. திருமறுகு-திருவீதி. 2. கடுஈன்ற-நஞ்சைப் பெற்ற. ஒதைக் கடல்-ஒலி பொருந்திய கடல். வேழக்கரும்பு-மிகச் சிறந்த கரும்பு. வேய் முத்தம்-மூங்கில் முத்து. அலமந்தழிய-சுழன்று வருந்தியழிய. கதழ் எரி-விரைந்தெரியுந் தீ. மூங்கில்கள் ஒன்றொடொன்று தேய்படுவதால் காட்டுத்தீ யுண்டாகுமென்பர். 3. கண்ணாற் பயந்த இளங்குமரன்-முருகக் கடவுள் இறைவனுடைய நுதல் விழியிற்றோன்றினராகலின் இவ்வாறு கூறினார். கதிர்கொன்று-ஒளியைக் கக்கி. பரிதி-கதிரவன். தளிரினியல்-தளிரின் தன்மை. விளரி-விளரிப்பண்பாடும்.
|
|
|
|