| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
நேரா வெமக்குக் கொடுத்தவுட னிலையா தழியும் பொருளாவி நெறியின் மயங்கித் தமவென்னு நினைவி னோரிங் கிவரென்றும் தீரா வெகுளிக் கனற்கிவர்தஞ் சிந்தை முருட்டு விறகென்றுந் தீய காமக் கள்ளுண்டு செருக்கு களிய ரென்றுமருள் கூரா தழுக்கா றெனுமளற்றுக் குழிவீழ் குருட ரிவரென்றுங் கொலையை யஞ்சா ரென்றுமுளங் கொண்டு தமியே மழைப்பவுநீ வாரா தொழியல் பெருங்கருணை வடிவே வருக வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(1) |
| |
| |
அணங்க வெம்மைப் பிடித்திருந்த வவாப்பே யகன்று குடிபோக வருள்செ யொருமந் திரவாதி யாகிப் பாச வல்லிருளைப் பிணங்கு மொருசெஞ் சுடராகிப் பிறவிப் பிணிக்கு மருந்தாகிப் பிறந்த வன்புக் குழவிக்குப் பெற்ற தாயா யிடும்பைச்சே றுணங்க வெழுசெங் கதிராகி யுழலுஞ் சமயக் கடாக்களிற்றை யுடற்று மரிமா னேறாகி யுவந்து தமியே நறுமலர்தூய் வணங்க வொருதே வாய்க்கருணை வடிவே வருக வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(2) |
| |
|
| |
1. தமவென்னும்-தம்முடையவென்னும். வெகுளிக் கனல்-சினத்தீ. முருட்டுவிறகு-காய்ந்த விறகு. அளற்றுக்குழி-சேற்றுக்குழி. வாராதொழியல்-வராமற் போகாதே. 2. அணங்க-வருத்த. அவாப்பேய்-பேராசைப்பேய். இடும்பைச் சேறு உணங்க-துன்பமாகிய சேறு காய. கடாக்களிறு-ஆண் யானை. உடற்றும்-வருத்தும். அரிமான் ஏறு-ஆண் சிங்கம்.
|
|
|
|