| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
பைந்தா துகுக்கு நறுங்கொன்றைப் பனிமா மலருங் குழவியிளம் பயில்வெண் மதியுந் துளையெயிற்றுப் பாம்புஞ் சுமக்கு மன்றுநீ செந்தா மரைச்சே வடிநோவத் திரும்பித் திரும்பி யோரிரவிற் சேல்வென் றகன்ற வரிமதர்க்கட் சிலைக்கூன் புருவத் தரளநகை நந்தா விளக்கின் றிருமனைக்கு நாவ னகரின் வன்றொண்டர் நடத்த வொருதூ தாளாகி நடந்த வுனக்கின் றடியேம்பால் வந்தால் வருமோர் பழியுண்டோ மதுரக் கனியே வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(3) |
| |
| |
முருந்தேர் நகையார் மயறுரக்கு முத்தே வருக பிறவிவன முரிக்குங் கருணைக் கடாக்களிறே முன்செய் தவத்தோர் தமக்குவரு விருந்தே வருக தூண்டுசுடர் விளக்கே வருக சோதிமணி விழியே வருக பரமுணர்ந்து விளைக்குந் தவத்தோர் பானிறைய இருந்தே கமழுந் தீங்கனியே யிறையே வருக புகழ்நிலா வெறிக்கு மறுவின் மதியமே யெமையா ளுடையாய் வருகவரு மருந்தே வருக பெருங்கருணை வடிவே வருக வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(4) |
| |
| |
இரவின் முயல்வார் மிடியினா லிரங்கா வுளத்த னெனப்படுத லிருளாற் பகைஞ னெனப்படுத லிறவாக் கொடுந்தீ வினையினால் பொருவில் கொலைஞ னெனப்படுதல் பொய்யாற் பொய்ய னெனப்படுதல் பொறாமை யதனா லிவனென்றும் பொறாமை யினன்கா ணெனப்படுதல் வெருவு முடம்பி னிடும்பையினால் விளங்க வறியா னெனப்படுதல் வெகுளி யதனாற் றரியாத வெகுளி யினனா மெனப்படுதல் மருவி யுலகில் வருங்கருணை வடிவே வருக வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(5) |
| |
| |
சுருளுங் குடரும் புழுமலமுஞ் சொரியு நீருங் கலந்துபுறந் தோன்றா வயிறும் வேறொருபாற் றோன்றி நரலை யெனுந்தசைதான் திரளும் புன்மார் புறுமுலையுந் திமிரு நறுநாற் றப்பொருளாற் றீர்க்கு முடலைப் புலாலுடம்புஞ் செத்தாற் கிடந்து புறங்காட்டில் புரளுந் தலையுங் கொடுநின்ற புன்மா தரைவா னமுதமே பொன்னங் கொடியே பசுங்கிளியே பூவாய் மயிலே யென்றென்று மருளும் பெரும்பித் தொழியவரு மருந்தே வருக வருகவே மயிலை வரையிற் சிவஞான மணியே வருக வருகவே.
|
(6) |
| |
|
| |
3. உகுக்கும்-சிந்தும். நந்தா விளக்கு-நந்தா விளக்கைப் போன்ற பரவை நாச்சியார். நாவல் நகரின் வன்தொண்டர்-சுந்தரர்.4. முருந்து-மயிலிறகின் அடி. மயல் துரக்கும்-மயக்கத்தைப் போக்கும். பரம் உணர்ந்து-பரம் பொருளை உணர்ந்து. அருமருந்து-அரிய அமுதம். 5. இரவு-இரத்தல். மிடி-வறுமை. வெருவும்-அஞ்சும். இடும்பை-துன்பம். 6. சுருளுங்குடர்-சுருண்டுள்ள குடர். புறங்காடு-இடுகாடு. புன்மாதர்-இழிந்த மாதர்கள். பொன்னங்கொடி-பொற்கொடி.
|
|
|
|