முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
கடியிற் சிலகஞ் சுகமனிதர் கல்வீழ் மணிநீர்க் குவளைமலர்க்
       கயத்துப் பாசி யெனவொதுங்கிக் கடிதின் முன்ன ரெனநெருங்கிப்
படியிற் பணியக் கிடையாமற் பாம்பின் றலையிற் பெருஞ்சுமையைப்
       பகைதீர்த் தொருசெங் கோலோச்சிப் பாது காக்கு முடிமன்னர்
தொடியிற் பொலிந்த கரங்கொண்டு துடைத்துத் துகடம் முடற் கணிந்து
       சுடர்மா மணிப்பொன் மகுடத்திற் சுமப்பச் சிறந்த நினதுதிரு
அடியிற் புழுதி படும்வண்ண மடியேஞ் சிற்றி லழியேலே
       யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.
(1)
அழிக்க வுளத்துக் கொண்டனையே லடங்கா தெழும்வெங் கொடுஞ்சினத்தை
       யழிக்க கடலிற் பெருகியெழு மவாவை யழிக்க செருக்குளத்தை
அழிக்க விருளி னுய்த்திடுமோ ரழுக்கா றதனை மூலமற
       வழிக்க காமப் பெரும்பிணியை யழிக்க கொலையை யஞ்சாமை
அழிக்க வினைகண் மூன்றனையு மழிக்க வழியு முடம்பதனை
       யழியா தென்னுங் கருத்ததனை யழிக்க மூல மலவிருளை
அழிக்க புழுதி கொடுசமைத்த வடியேஞ் சிற்றி லழியேலே
       யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.
(2)
பழித்த வுலக முயிராதி பகவ னெனப்பே தித்தென்றும்
       பாழ்செய் மூல மலவிருளைப் பதத்தா லழிக்குஞ் செயலன்றிச்
சுழித்த கடலி லரவணையிற் றுயில்வோ னளித்த மலரயனாற்
       றோன்று முலக மழித்திடுமத் தொழிலும் புகழ்செய் யாததெனின்
இழித்த புன்சொற் புன்புலவ ரிசைத்துத் தாமே யழித்தலுறும்
       யாப்பே போல விழைத்தளவில் யாமே யழித்து விடுமிதனை
அழித்த னினக்குப் புகழ்தருமோ வடியேஞ் சிற்றி லழியேலே
       யழியாக் கருணைச் சிவஞான வையா சிற்றி லழியேலே.
(3)

1. கடியில்-சினந்தால். கஞ்சுக மனிதர்-மெய்ப்பை அணிந்த மக்கள். கயம்-குளம். கடிது-விரைவாக. படி-நிலம். தொடி-வளை; வீரவளை. துகள்-தூள். மகுடம்-முடி.2. அழிக்க-துடைக்க; போக்க; கெடுக்க. இருள்-நிரயம். மூலம்-முதல்; வேர். மலவிருள்-ஆணவ மலவிருள். சமைத்த-செய்த. 3. பழித்த-பழிக்கப்பட்ட. பேதித்து-மாறுபாட்டைச் செய்து. பதம்-திருவடி. அரவணை-பாம்புப்படுக்கை. யாப்பு-பாட்டு. இழைத்த அளவில-கட்டியவுடனே.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்