முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
குன்றவரி சிலைகொண்ட வெம்முடைய நல்லருட்
       குன்றமே தெய்வ மென்றுங்
குறுகுமவ னடியவர் குழாத்தினுட் புகுவதே
       கூறரிய வீட தென்றும்
மன்றுளுமை கண்குளிர நின்றுநட நவிலுமொரு
       வள்ளறிரு வஞ்செ ழுத்தே
மந்திரம தென்றும்விட யப்பகை பொறுப்பதே
       வலியென்று முள்ள படியே
நின்றுதனை மயலின்றி யுணர்கின்ற வுணர்வதே
       நிலையான வுணர்வ தென்று
நெஞ்சினிறை யழியவெகு ளிக்கடுங் கனலெழா
       நிலையதே தவம தென்றுஞ்
சென்றுவினை பொடியாக வருள்செயருண் மேகமே
       சிறுபறை முழக்கி யருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
       சிறுபறை முழக்கி யருளே.
(1)
வந்துபிற கடவுளர்க டமையுரைத் துமைகாண
       மணிமன்று ணடமாடுமா
மணியையிகழ் பரசமய நிலைகுலைய வென்றறையும்
       வன்றிறற் பறைய தென்னச்
சிந்தைகவ ருந்துயர் விளைத்துவரு காமமொடு
       சினமென்னும் வெம்புலிக்குந்
தீராத வாணவப் பேரிருட் குந்தனி தெழிக்குநெய்
       தற்பறை யென
நந்தலரு மறிவென்னு மோரிளங் கன்னியை
       ஞானவடி வான பிரம
நன்மணம் புணர்கின்ற மங்கலப் பறையென்ன
       நற்றவக் குன்ற மேநீ
செந்தளிரி னெழில்வென்ற நின்றிருக் கையினாற்
       சிறுபறை முழக்கி யருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
       சிறுபறை முழக்கி யருளே.
(2)

1. குன்றம்-மலை. வரிசிலை-வரிந்து கட்டப்பட்ட வில். குழாம்-கூட்டம். மன்று-அம்பலம். விடயப் பகை-காமப்பகை. ஒறுப்பது-அடக்கி யொடுக்குவது. நெஞ்சின் நிறை-உள்ளத்தின் பக்குவத்தன்மை. 2. நடமாடும்-திருக்கூத்தியற்றும். வன்திறல்-மிகுவலிமை. தெழிக்கும்-ஒலிக்கும். நந்தலருமறிவு-அஞ்ஞானத்தாற் கெடுதலிலாத மெய்யுணர்வு. செந்தளிர்-சிவந்த தளிர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்