முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ்
கருவிளைக் கின்றசிற் சிலமொழி பகர்ந்துசில
       கடவுளரை யிறைவ ரென்று
கண்டியொடு வெளியதிரு நீறிழந் திருள்பருகு
       கனலுமுயர் வானகத்தின்
இருவிளக் குந்திகழும் விழியான வெம்மிறையை
       யிகழ்புறச் சமயர்தங்க
ளிருகவுளி னுங்கடிதி னறைவதென வெற்றிவே
       லிறைமயிலை வெற்பின்முடிமேல்
ஒருவிளக் கெனநின்று திகழ்பவா செம்மணிக
       ளொளிர்பணா முடியனந்த
வுரகமென் றிடுபெயர்த் தண்டின்மிசை நிலமென்னு
       மோரகலின் மெய்த்தபுகழாந்
திருவிளக் கிட்டுவைத் திடவல்ல வித்தகா
       சிறுபறை முழக்கியருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
       சிறுபறை முழக்கியருளே.
(3)
வார்மணி முலைக்கருங் கயனெடுங் கட்பவள
       வாய்மலர்க் குழன்மங்கையர்
மலரடிக் கணிசிலம் பரிமணி முழக்கமும்
       மதமழை விடாதுசொரியுங்
கார்மணி முழக்கமுங் குணில்பொரு பெரும்பனைக்
       கடன்முழக் கமும்வீரர்தங்
கழலொலி முழக்கமுஞ் செங்குதலை வாய்மகார்
       கட்டுகிண் கிணிமுழக்குந்
தார்மணி முழக்கமொடு வருபரி முழக்கமுந்
       தருமசாலைகண் முழக்குஞ்
சதுர்மறை முழக்கமுஞ் செந்தமிழ் முழக்கமுந்
       தமனியத் திருமறுகுலாந்
தேர்மணி முழக்கமுங் கிளர்கச்சி நகராளி
       சிறுபறை முழக்கியருளே
சிவநெறி தழைக்கவரு சிவஞான தேவனே
       சிறுபறை முழக்கியருளே.
(4)

3. கருவிளைக்கின்ற-பிறவியை உண்டாக்குகிற. கண்டி-சீவகண் மணிமாலை. வானகத்தின் இருவிளக்கு-பரிதிமதியாகிய இருசுடர். வெளிய-வெண்மையான. கவுள்-கன்னம். திகழ்பவர்-விளங்குபவனே! அனந்த உரகம்-ஆதிசேடனென்னும் பாம்பு. மெய்த்தபுகழ்-உண்மையாக விளங்கும் புகழ். 4. வார்-கச்சு. சிலம்பு அரி மணி-சிலம்பினுள் ஒலியுண்டாக இடப்படும் மாணிக்கமணி முதலியன. முழக்கம்-ஒலி. குணில்பொரு-தடியாலடித்து உண்டாக்கப் பெறுகிற. மாகார்-சிறுவர்கள். தமனியம்-பொன்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்