| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| |
அருவடிவ மாகிமன மொழிகடந் துயர்பிரம மங்கையினு நெஞ்சகத்து மணுகிவன் சிறைக்கொடியி னிருவிழிக் கொருமணி யமர்ந்ததென நின்றநிலையைக் குருவடிவு கொண்டுணர்த் துறுகுணக் குன்றமே கோடிமா தவர்குறுகியே குற்றேவல் செய்தரு கிருந்துநின் றிருவுளக் குறிப்பின்வழி யொழுகிநிற்பக் கருவடிவ நிலையென்றும் செய்யாத கொலைகளவு கட்காம மேபயிலும்வெங் கயவர்தமை யுறவுகொண் டொழியாத வென்றனைக் கடிதினரு குறவழைத்துத் திருவடிகள் புன்றலைக் கணிசெய்த வருளாள சிறுதே ருருட்டியருளே சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.
|
(1) |
| |
| |
தகரமலர் வார்குழற் பவளவாய் மடமாதர் தடநெடுங் கண்களென்னத் தாவுமறி கிடைகிடந் திடுபெருங் கொல்லையைத் தண்டிரை சுருட்டியெறியும் மகரமனை யுண்டதிர்த் தெழுகமஞ் சூன்மழை மாரியென வந்துபிளிறும் வளைமருப் புழல்செவிப் புகர்முகச் சிறுகணல் வலிவேழ மதநனைப்பப் பகரலரு மெறுழ்வலிப் பிறைமருப் பொருகரும் பன்றியது கண்டுசெவ்விப் பதமென்ன வுழவண்ட முகடுதொடு நெடியமுதிர் பணை தரள விதைவிதைக்குஞ் சிகரமணி மயிலைமலை முருகனுட னமருமிறை சிறுதே ருருட்டியருளே சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.
|
(2) |
| |
| |
யாவர்யா வருமெழுங் கனவிருள் விழுங்குமோ ரிரவியைத் தத்தமக்கிங் கெதிரென்று புகல்கின்ற தென்னவிவ் வுலகில்வரும் யாவருந் தத்தமக்கு மேவுமா ரருளுடைய னென்னவரு மவிரோதி விரிசுடர் விளக்கொன்றுதான் விழையவொரு கம்பத்து மிசையிருந் தகமெலாம் விரிகதிர் பரப்புமதுபோல் ஓவிலயா வண்புகழ்க் கதிரொளியை வெண்டிரைய வோதையங் கடலுடுத்த வுலகெலா மொருமயிலை வரையிருந் தொளிர்விக்கு மொருவமா முதறடிந்த தேவர்சே னாபதியொ டுற்றிருந் தெனையாளி சிறுதே ருருட்டியருளே சிவசமய குலதிலக சிவஞான மாமுனிவ சிறுதே ருருட்டியருளே.
|
(3) |
| |
|
| |
1. சிறைக்கொடி-சிறையினையுடைய காக்கை. புன்தலை-இழிந்ததலை. 2. தகரம்-மயிர்ச் சாந்து. மகரமனை-கடல். கமஞ்சூன் மழை-நிறை கருப்பங் கொண்ட முகில். புகர்முகம்-புள்ளிகளையுடைய முகம். எறுழ்வலி-மிகுந்த ஆற்றல். 3. கணவிருள்-பேரிருள். ஒவிலா-ஒழிதலில்லாத. மாமுதல் தடிந்த-மாமர வடிவமாக நின்ற சூரபன்மனைக்கொன்ற. கம்பம்-விளக்குத்தண்டு. அகமெலாம்-வீடு முழுவதும்.
|
|
|
|