| 21. சிவஞானபாலையசுவாமிகள் பிள்ளைத்தமிழ் |
|
| வேறு |
| |
| |
கருத்திற் காண்குறு நாடிகண் மூன்றையுங் கண்டுநன் னடுநாடி கலந்தி யங்குறு முயிர்க்கழி விலையெனக் காட்டிநோ யினர்நெஞ்சந் திருத்திக் கைப்புவிட் டருமறைப் பாலொடு தீநிறப் பெருமுக்கட் டீஞ்சு வைக்கனி தன்னையுட் கொள்கெனத் தெருட்டுபு முனங்கூட்டு மருத்துப் பையினைச் சோதித்து வொண்பொடி மருந்தெடுத் துடல்பூசி மணிய ணிந்தரு ளஞ்செழுத் தாகிய மந்திரம் பிறழாமல் உரைத்திட் டோம்புறும் பவப்பிணி மருத்துவ னுருட்டுக சிறுதேரே யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே.
|
(6) |
| |
| |
வண்ட மிழ்ப்பெரும் புலவர்தஞ் செய்யுளின் வழுப்படாச் சொல்லோடும் வழுவ மைத்தசொற் புணர்த்திடு மாறென வயங்கிள மதிசூடி தொண்டு பட்டிடு மயறபு நன்னெறித் தொழும்பின ரொடுகூடச் சுளிவு றாதடி யேன்றனைத் தழுவியே தொல்லிசைப் புலவோர்தம் தண்ட மிழ்த்தொடை புணர்க்கிலா முழுவழுத் தாழ்ந்தபுன் சொற்போலச் சங்க ரன்றிருத் தொண்டில்வேற் றுலகரைச் சார்வற வரைந்திட்ட ஒண்ட ரைத்தனி முகமெனுங் கச்சிய னுருட்டுக சிறுதேரே யுலக வாஞ்சிவ ஞானமா முனிவர னுருட்டுக சிறுதேரே.
|
(7) |
| |
|
| |
6. நாடிகள் மூன்று-வாதநாடி, பித்த நாடி, சிலேத்தும நாடி. கைப்பு-கசப்பு. தெருட்டுபு-தெளிவித்து. ஒண்பொடி மருந்து-திருநீறு. மணி-சிவகண்மணி. ஓம்புறும்-பாதுகாக்கும். 7. மயல்தபு-மயலைப் போக்கிய. தொழும்பினர்-தொண்டர் சுளிவு-முகஞ்சுளித்தல். முழுவழுத் தாழ்ந்த-பெருந்தவறு மிகுந்த.
|
|
|
|