முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
கட்டளைக்கலித்துறை
மறிமறைத் தாலு மழுமறைத் தாலு மணிமிடற்றின்
குறிமறைத் தாலு மதிமறைத் தாலுமென் கொன்றைமலர்
வெறிமறைத் தாலு மறிவே னுனைமதன் மேற்பகைமை
நெறிமறைத் தாயிலை யேசிவ ஞான நெடுந்தகையே.
(18)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
நெடுமடைக்கட் குடவளைசென் றடைப்பவிள வரானுழைந்து
       நீர்செ லுத்துந்
தடமுடைத்தண் பணைமருதக் கச்சிநகர்ச் சிவஞானத்
       தம்பி ரானே
படமுடிப்பார் மிசைநினது புகழ்பாடிப் பன்மலர்தூய்ப்
       பணிகின் றேற்குக்
குடமுடைத்தா லெனப்பாசங் கெடுப்பதல்லா லெனக்குநீ
       கொடுப்ப தென்னே.
(19)
நேரிசைவெண்பா
என்ன தவவுதவி யீதென் றுணர்கிலேன்
மன்னுசிவ ஞானமுனி வந்துற்றான் - தன்னைநிகர்
மாசங் கெடுக்கு மலர்த்தடஞ்சூழ் கச்சியிலெம்
பாசங் கெடுக்கும் படி.
(20)

18. மறி-மான். மிடற்றின்குறி-கண்டத்தில் அமைந்த நஞ்சுக் கறை. வெறி-மணம். பகைமை நெறி-பகையாந்தன்மையை. நெடுந்தகை-மிகுந்த பெருமையுடையவன். 19. குடவளை-குடம்போன்ற சங்கு. படமுடிப் பார் மிசை-ஆதிசேடப் பாம்பின் முடிமீதுள்ள உலகத்தின்கண். 20. என்ன தவ உதவி-எக் காலத்திலே செய்த தவத்தின் பலன். மாசு அங்கு எடுக்கும்-குற்றத்தை அவ்விடத்திலே நீக்கும்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்