முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
நேரிசைவெண்பா
இடையினமே போல விரண்டறமு மல்லா
நடையினமே நாமயிலை ஞானி - புடையினமே
சார்வாகா தோடித் தடுமாறு கின்றமையால்
தீர்வாகா மாயைச் செயல்.
(25)
காலம், எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
செயலெலா மறமாகச் செய்யுங் காலந்
       திகழ்வெலாம் பொய்யாகத் திகழுங் காலம்
அயலெலா முறவாகி யமையுங் கால
       மறிவெலாந் தனையறிய வணையுங் காலம்
மயலெலா மொழிந்துபர வசமாங் கால
       மனமெலாம் பேரன்பு மயமாங் காலம்
இயலெலாம் பிறப்பொழிய வெடுக்குங் கால
       மெங்கள்சிவ ஞானியரு ளிசையுங் காலம்.
(26)
கட்டளைக்கலித்துறை
காலுண்டு வாழு முனிவரு முள்ளங் கலங்குநஞ்சம்
மேலுண்டு நஞ்சைய னாம்பழி மாறவெல் வீரவளை
மாலுண்டு டுமிழு முலகமெ லாஞ்சொன் மயிலைவெற்பில்
பாலுண்டு பாலைய னென்றிருந் தாய்கொலெம் பாலையனே.
(27)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஐய மயிலைச் சிவஞானி யந்தோ நம்மாற் செயப்பட்ட
உய்ய வரிய பாதகங்கட் கொழிக்கு முபாய மிலையென்று
நையு மனிதர் நினதுதிரு நாமத் தெழுவா யெழுத்திரண்டும்
பைய வொருகா லியம்பியுய்யப் பற்றார் துயரி னுற்றாரே.
(28)

25. இரண்டறம்-இல்லறம், துறவறம். சார்வாகாது-செல்லாமல். தீர்வு-முடிவு. 26. அயல்எலாம்-பக்கத்தில் உள்ளவர்களெல்லாரும். பரவசம்-பரத்தின் தன்மையைப் பெற்று நிற்குந்தன்மை.27. காலுண்டு-காற்றைப் புசித்து. வளைமால்-சங்கினையுடைய திருமால். சொல்-புகழ்ந்து கூறும். 28. உய்ய அரிய-பிழைப்பதற்கருமையான. எழுவாய் எழுத்திரண்டு-சிவ என்பது. சிவ என்று ஒருமுறை கூறினும் எத்தகைய தீவினைகளும் ஒழிந்துபோகுமென்பது சிவாகம நூற்றுணிபு. பைய-மெள்ள. பற்றார்-பிடிக்கமாட்டார்கள்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்