முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
1. சோணசைலமாலை
மாந்தளிர் கவற்று மணிச்சிலம் படிகள்
      வடுவகிர் பொருவும்வா ணெடுங்கண்
காந்தளி னிமைக்கு மங்கையென் றவலக்
      கன்னியர்ப் புகழ்வினை யறுமோ
பூந்திரை சுருட்டுங் கடல்கடை குநரொண்
      பொறியர வின்றிமா தவர்க்குச்
சாந்துய ரகற்று மருந்தருள் சோண
      சைலனே கைலைநா யகனே.
(77)
சிந்தனை கலங்கி யிணைவிழி யிருண்டு
      செவிகளுஞ் செவிடுபட் டைம்மேல்
உந்திட வுயிர்போம் பொழுதுநின் வடிவ
      முளங்கொளும் பரிசெனக் கருளாய்
மந்தர சைலந் தருவிடங் களத்து
      வைத்திடத் தினிலிம சைலந்
தந்திடு மமுதை வைத்திடுஞ் சோண
      சைலனே கைலைநா யகனே.
(78)

77. கவற்று-வருத்து; வகிர்-பிளப்பு; பொரு-இங்கு உவம உருபு; மாதவர்-சிறந்த தவமுடையவர்கள். 78. ஐ என்பது கபம், கோழையுமாம். மரணத்துன்பமாவது சிந்தை கலங்கல், இருவிழியும் இருளல், செவிகள் செவிடுபடல், கபங்கட்டல் முதலியன. இது “புலனைந்தும் பொறி கலங்கி நெறி மயங்கி, யறிவழிந்திட்டு ஐமேலுந்தி” என்பதனாலும் அறிக. அமுதை-இங்கு, உமையை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்