| 1. சோணசைலமாலை |
|
| |
நயங்கொளு மலரா னின்றிரு வடியை நாடொறு முயிருணுங் கூற்றம் பயங்கொள வகலா தருச்சனை புரிந்து பரகதி யடையுநா ளுளதோ வயங்கொளும் விடயப் பெரும்பகை கடந்து வானநா டாண்டிட மதிப்போர் சயங்கொள வடைதற் கரணமாஞ் சோண சைலனே கைலைநா யகனே,
|
(79) |
| |
| |
பிரம்பொரு கரங்கொண் டடிப்பநந் தீசர் பெருங்கல்வீழ் பாசியி னிமையோர் சிரம்பொர வொதுங்கி நெருங்குநின் னவையிற் றீயனே னணையுநா ளுளதோ அரம்பொர வகன்ற விலங்கிலை நெடுவே லமர்த்தகட் கிரிமக ளிணைக்குஞ் சரம்பொர விருந்து விளங்குறுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(80) |
| |
| |
காமரை முனிந்த முனிவரர் புகுமெய்க் கதியிடைப் புகவிடுத் திடினும் பாமர னிவனென் றிருளினுய்ப் பினுநின் பதமல ரன்றிவே றுளதோ வாமரை பொருந்து முலகுள குவட்டு மலைகள்போ லாதுணா முலையாந் தாமரை பொருந்து மானுள்வாழ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(81) |
| |
| |
தொடுக்குமா கமங்க ளெலாஞ்சொலைந் தெழுத்துந் துணிந்தநெஞ் சிருக்கையாற் பகையைப் படைக்கைதா னிருந்து மஞ்சுறு மவர்போற் பகட்டுமா மறலியை வெருவேன் மடக்குவார் கலாப மயிறுயி லெழுந்து மருவலர் வேங்கைமீ தகவத் தடக்கைவா ரணங்கள் பிளிறிடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(82) |
| |
| |
நிந்தியா துடல முழுதுநீ றணிய நேசியா தமலவைந் தெழுத்துஞ் சிந்தியா துழலு மெனைக்கொடுங் கூற்றென் செய்யுமோ வறிந்திலேன் றமியேன் வந்தியா வரவ மன்றிடைக் கண்ட மலர்சிலம் படியைமண் ணுணிபோய்ச் சந்தியா தயர வொளித்திடுஞ் சோண சைலனே கைலைநா யகனே.
|
(83) |
| |
|
| |
79. வானநாடு-ஈண்டு முத்தியுலகம். வயம்-வெற்றி;வலிமையுமாம். சயம்-வெற்றி, நயம்-நல்ல. 80. பாசிபோலொதுங்கி நெருங்குமவையென்க. அமர்த்தல்-பொருதல். அரம்பொர-அரமானது தேய்க்க. மற்ற மலைகளில் யானைகள் மோதிப் போர் செய்ய இவ் வண்ணாமலையை உமையவள் கொங்கை யானைகள் மோதிப்போர் செய்கின்றன என்க. 81. உண்ணாமுலைகளென்னுந் தாமரையரும்புகளைக் கொண்டமான்-உண்ணாமுலையம்மையார். “உண்ணாமுலையாடாமரை பொருந்துமான்” என்பது பாடமேல் உண்ணாமுலையம்மை யாரது முகத் தாமரையிலுள்ள கண்களாகிய மான்கள் என்க. பாமரன்-அறிவற்றவன். இருள்-நிரயம். வாம் மரை-தாவுகிற மான்கள். 82. ஐந்தெழுத்தும் எனது திடம் பெற்ற மனத்திலிருக்கையால் மறலியை வெருவேன் என்பது. அகவல்-கூவல். 83. அரவம்-பதஞ்சலி முனிவர்; மண் உணி-உலகங்களையுண்ட திருமால். அரவங்கண்ட அடியை மண்ணுணியென்னும் பாம்பு காணாதயர வென்பதோர் நயமுங்காண்க. வந்தியா-வந்தனஞ்செய்து.
|
|
|
|