முகப்பு பக்கம் எண் :
தொடக்கம்
22. சிவஞானபாலைய சுவாமிகள் கலம்பகம்
ஊசல். எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
காண்டகைய விமிழிசைவெள் ளருவி தூங்குங்
       கவின்மயிலைச் சிவஞான தேவன் கூறும்
மாண்டகுநன் மொழிகேளா வாவி பாவ
       வல்வினையு நல்வினையு நின்று தள்ள
மீண்டுதுயர் நிரயமொடு துறக்க மேவி
       மெலிவதிவ்வா றெனத்திரிந்து காட்டல் போலத்
தூண்டுசுடர் விளக்கனையீ ரிரும ருங்குந்
       தோழியர்க ணின்றாட்ட வாடீ ரூசல்.
(37)
தாழிசை
ஊசலாடுறு நெஞ்சொடும்பிட ருற்றவெற்றிகொள் காலனை
       யுணர்ந்திலேன்பய மற்றுவேண்டிய துண்டுடுத்துழன் றொண்மலர்
வாசமார்குழல் மாதரார்செயு மாலின்மூழ்கின னத்துயர்
       மாறுமாறுநி னைந்திலேனரி வாய்தலிற்படு மனையின்வாய்
தூசுலாமணை மீதுவாள்விழி துஞ்சவீழ்பவர் போலவே
       தொண்டர்தந்துயர் கண்டிராது துடைக்குறுஞ்சிவ ஞானிநீ
ஆசுதீரருண் மிகுதிகாணிய வஞ்சலென்றருள் செய்தியோ
       அருண்மறைத்து விடுத்தியோசொ லறிந்திலேன்றிரு வுள்ளமே
(38)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
உள்ளதன் பொருள ளிக்கு முயர்சிவ ஞான தேவன்
தெள்ளும்வண் புகழுங் காமற் றெறுபிர தாப முந்தாம்
வெள்ளைநன் மதியுஞ் செங்கேழ் வெய்யவன் றானு மாகி
எள்ளவந் தெதிர்வ துண்டோ வெனவெழுந் துலாவு மன்றே.
(39)
மேற்படி வேறு
அன்றெடுத்து மலைகுழைத்துப் புரமெரித்த புகழல்லா
       லளற்றாழ் வேனை
நின்றெடுத்து மனங்குழைத்து வினையிரித்த நின்புகழை
       நிகழ்த்தல் செய்யார்
குன்றெடுத்த புகழிருப்பச் சிறசிலையொன் றெடுத்தபுகழ்
       கூறல் போன்மான்
கன்றெடுத்த கரமறைத்துச் சிவஞானிப் பெயர்படைத்த
       கருணைக் குன்றே.
(40)

37. இமிழ்இசை வெள்ளருவி-இனிய இசைபோல் ஒலிக்கும் வெள்ளிய அருவி. தூங்கும்-இழியும். மாண்தகு-மாட்சிமைப்பட்ட. ஆவி-உயிர். இருமருங்கும்-இரண்டு பக்கங்களினும். 38. ஊசல் ஆடுறும்-ஊஞ்சல்போல ஆடுகின்ற. மாலின் மூழ்கி-காம மயக்கத்தில் ஆழ்ந்து. ஆசுதீர்-குற்றத்தைப் போக்குகிற. 39. தெள்ளும்-தெளிந்த. வண்புகழும்-பெரும் புகழும். தெறு-வெல்லுகிற. பிரதாபமும்-பெரும்புகழும். 40. அளற்றாழ்வேனை- துன்பக்கடலில் ஆழுகின்றஎன்னை. வினையிரித்த-வினையைப் போக்கியமான்கன்று எடுத்த கரம்-மானை யேந்திய கை.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்